Published : 07 May 2020 03:55 PM
Last Updated : 07 May 2020 03:55 PM
தமிழ் சினிமாவில் மக்களின் மதிப்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமானின் பிறந்த நாள் இன்று. இவர் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளியான தரமான படங்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இன்றுகூட இவருடைய பெயருக்காகவே திரையரங்குக்கு வர ரசிகர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர்.
அர்ஜுன் படமும் கன்னட ரீமேக்கும்
நெய்வேலியில் பிறந்தவர் பிரபு சாலமன். சுந்தர்.சி, அகத்தியன் போன்ற இயக்குநர்களின் உதவியாளராகப் பணியாற்றியவர். அர்ஜுன், சோனாலி பிந்த்ரே நடிப்பில் 1999-ல் வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ அவர் இயக்கிய முதல் திரைப்படம். 'முதல்வன்' நடித்த கையோடு இந்தப் படத்தில் நடித்தார் அர்ஜுன். அப்போது தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இந்தப் படம் மாறுபட்ட காதல், சென்டிமென்ட் நடிப்பை வெளிப்படுத்த உதவியது. இந்தப் படத்தில் 'தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியது' என்ற தேவாவின் மெலடி காதல் பாடல் இன்றுவரை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது.
அடுத்ததாக சேரனின் ‘பாரதி கண்ணம்மா’ படத்தை கன்னடத்தில் இயக்கினார் பிரபு சாலமன். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக விக்ரம் - சினேகா இணையை வைத்து இவர் இயக்கிய ‘கிங்’ படமும் தோல்வி அடைந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு குணச்சித்திர வில்லன் நடிகராக நடித்துவந்த கரண் கதாநாயகனாக அறிமுகமான ‘கொக்கி’ படத்தை இயக்கினர். இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சிபிராஜை வைத்து இயக்கிய ’லீ’ வித்தியாசமான ஆக்ஷன் படமாக அமைந்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்ததாக ‘லாடம்’ படமும் ஓரளவு கவனம் ஈர்த்தது.
மைல்கல்லான ‘மைனா’
2010-ல் வெளியான ‘மைனா’ பிரபு சாலமன் யார் என்பதை உலகுக்கு உணர்த்தியது. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் திரைத் துறைப் பிரபலங்களாலும் தமிழ் சினிமாவில் ஓர் அரிய முத்து என்று கொண்டாடப்பட்ட படம் ’மைனா’. மலைப் பகுதியிலிருக்கும் முரட்டு இளைஞன், அவனது காதலி, தனது தலை தீபாவளி நாளில் அவர்களைச் சிறைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரி, வயதான துணை அதிகாரி ஆகியோரின் கதையை ஒரே நேர்கோட்டில் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொன்ன இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார்.
வெளியீட்டுக்கு முன்பே படத்தைப் பார்த்த கமல்ஹாசன், ''இந்தப் படம் பார்த்த பின் நல்ல படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாகத் தூங்கினேன்'' என்று பாராட்டியிருந்தார். இயக்குநர் பாலாவும் படத்தைப் பாராட்டியிருந்தார். எளிய மலைக் கிராமத்துப் பெண்ணாகத் தோன்றிய அமலாபால் பார்வையாளர்கள் மனங்களில் அசல் மைனாவாகச் சிறகடித்தார். தம்பி ராமையாவுக்குத் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 2010 தீபாவளிக்கு வெளியான படம் பெரும் வணிக வெற்றியையும் பெற்றது.
யானைப் பாகனின் காதல்
இதற்கடுத்து ஒரு மலைக் கிராமப் பின்னணியில் யானை மற்றும் யானைப் பாகனையும் பாகனின் காதலையும் அந்தக் காதல் வெற்றி பெற யானையின் தியாகத்தையும் உள்ளடக்கிய கதையை வைத்து பிரபு சாலமன் இயக்கிய படம் ‘கும்கி’. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக ரீதியான வெற்றியையும் பெற்றதோடு பிரபு சாலமன் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
அடுத்ததாக அவர் இயக்கிய காதல் படங்களான ‘கயல்’, ‘தொடரி’ இரண்டும் முறையே கடல் சார்ந்த பகுதி மற்றும் ரயில் பயணம் ஆகியவற்றின் பின்னணியில் அழகான காதல் கதைகளாக அமைந்தன.
மும்மொழித் திட்டம்
தற்போது ‘கும்கி 2’ படத்தையும் ’காடன்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் பிரபு சாலமன். இவற்றில் ‘காடன்’ தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிப் படமாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரபு சாலமன் தேசிய அளவில் கவனிக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை.
இவ்விரு படங்களும் பிரபு சாலமனின் வருங்காலப் படைப்புகளும் வெற்றி பெற அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT