Published : 06 May 2020 11:27 AM
Last Updated : 06 May 2020 11:27 AM
கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் கூட்டம் சேரும் எல்லா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், இறுதிக் கட்டத்தில் இருக்கும் திரைப்படங்கள், அரங்கில் வெளியான திரைப்படங்கள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கு தொடரும் என்றும், அப்படியே ஊரடங்கு ரத்தானால் கூட கரோனா அச்சம் காரணமாக மக்கள் மீண்டும் கூட்டமாகச் சேருவது கடினம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சினிமாவில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டுவரும் நிலையில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று திரைத்துரையினர் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் படப்பிடிப்புகளை தொடங்குவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு செய்துள்ளதாகவும், எனவே படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சினிமா படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் கொண்ட வரைவு ஒன்றை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு அனுப்பியுள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
அந்த வரைவு இன்னும் முழுமையடையவில்லை. அதை உருவாக்கும் பணி ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. திரைத்துறை நிபுணர்களிடமும், அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகு இறுதிகட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறைப்படுத்தப்படும்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT