Published : 05 May 2020 05:52 PM
Last Updated : 05 May 2020 05:52 PM

முகமில்லாத நபர் சம்பளத்துக்காகப் பரப்பும் தகவல்: விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக மகேஷ் பாபு காட்டம்

முகமில்லாத நபர் சம்பளத்துக்காகப் பரப்பும் தகவல் என்று விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக மகேஷ் பாபு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரணத்துக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் நிவாரண உதவி வழங்கினார்கள். ஆனால், விஜய் தேவரகொண்டா மட்டும் எந்தவொரு நிவாரணமும் அறிவிக்காமல் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் விரும்புபவர்கள் உதவலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா.

உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இதற்காக பலரும் நிதியுதவி அளித்ததோடு மட்டுமன்றி, உதவி தேவை என பதிவு செய்தவர்களுக்கு உதவவும் தொடங்கினார்கள். விஜய் தேவரகொண்டாவின் இந்த முயற்சியை தனியார் இணையதளம் ஒன்று கடுமையாக விமர்சித்தது. அவருடைய படங்களின் தோல்வியால் அவரிடம் பணமில்லை என்பதால் இப்படிச் செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டது. இதனை #KillFakeNews என்ற ஹேஷ்டேக் ஒன்றைத் தொடங்கி விஜய் தேவரகொண்டா கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற பல வருடக் கடின உழைப்பு, முயற்சி, பொறுமை, ஆர்வம் மற்றும் தியாகம் தேவை. மனைவிக்கு உரிய கணவனாக, குழந்தைகளுக்குத் தேவையான சூப்பர் ஹீரோ அப்பாவாக, ரசிகர்கள் ஏங்கும் சூப்பர் ஸ்டாராக உழைக்கிறோம்.

திடீரென ஒரு முகமில்லாத நபர், பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர், உங்களை அவமதிப்பார், வாசகர்களிடம் பொய் சொல்வார், தவறான தகவல்களைப் பரப்புவார். எல்லாம் அவரின் அடுத்த மாதச் சம்பளத்துக்காக.

இதெல்லாம் சகஜம் என்று நம்பும் உலகிலிருந்து நமது அழகான தெலுங்குத் திரைத்துறையை, என் ரசிகர்களை, என் குழந்தைகளை நான் காப்பாற்ற விரும்புகிறேன். நம்மை நம்பி நடத்தப்படும், ஆனால் நம்மைப் பற்றிப் பொய் சொல்லும், அவமரியாதை செய்யும் இதுபோன்ற போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம் துறையினரைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x