Published : 04 May 2020 07:41 PM
Last Updated : 04 May 2020 07:41 PM

இப்போதுபோல் எப்போதும் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்க வேண்டும்: ஸ்ரீப்ரியா வேண்டுகோள்

பொதுக் கழிப்பிடங்களை இப்போது பராமரிப்பதைப் போல் எப்போதும் பராமரிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. மேலும், மாநில அரசுகளும் கிருமிநாசினி தெளிப்பது, ரேஷன் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவல் அரசின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் ஸ்ரீப்ரியா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ஒட்டுமொத்த மக்கள்தொகையும் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கை கழுவும் சோப்பும், சானிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது. இதனைத் தவிர்த்திட, அரசு இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களது தயாரிப்புகளைப் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் விநியோகம் செய்திட உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் மக்களின் பொதுச் சுகாதாரம் மேம்படுவதால், நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்தப் பொருட்களை அன்றாடம் வீட்டுக்கு வந்து உடல்நலம் விசாரிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடமே கொடுத்து விநியோகமும் செய்திடலாம் என்பதும் ஒரு கூடுதல் யோசனை. அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களை இந்தப் பேரிடர் காலத்தில் பராமரிப்பதைப் போல் எப்போதும் பராமரிக்கப் படவேண்டும்".

இவ்வாறு ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைகளை வலியுறுத்தி CHANGE.ORG என்ற இணையதளத்திலும் ஒரு மனுவாகப் பதிவு செய்துள்ளார். அதிகமான கையொப்பங்கள் தான் அதை அரசின் மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லும். அதற்கு அனைவரும் அவசியம் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ஸ்ரீப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x