Published : 02 May 2020 05:59 PM
Last Updated : 02 May 2020 05:59 PM
உங்களுடைய பேச்சும், எழுத்தும் இன்னும் எளிமையாக இருந்திருக்கலாமே என்று விஜய் சேதுபதி எழுப்பிய கேள்விக்கு கமல் பதிலளித்தார்.
சமூக வலைதளத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியில் பலரும் சொல்வது 'கமல் பேசுவது புரியவில்லை, ட்வீட் செய்ததிற்கு விளக்கம் தெரியவில்லை' என்பதுதான். நேற்று (மே 2) மாலை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டிற்குக் கூட, பலரும் அர்த்தம் புரியவில்லை என்றனர். இது சமூக வலைதளத்தில் விவாதமாக மாற, உடனடியாக கமல் தரப்பில் அதற்கான விளக்கம் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய (மே 2) கமல் - விஜய் சேதுபதி நேரலையில் கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தப் பகுதி இதோ:
அபிஷேக்: உங்கள் பேச்சில் ஒரு உள் அர்த்தம் இருக்கும். அது புரியவில்லை என்று சொல்கிற ட்ரெண்ட் ரொம்ப ஆண்டுகளாகவே இருக்கிறது.
கமல்: அது என்னவென்றால், முன்பு எல்லாம் வரவே இல்லை. 'அய்யய்யோ மற்றவர்களுக்குப் புரிந்துவிடுமோ' என்ற பயத்துக்காக சொல்லப்படும் சுவரொட்டிகள் அவை. எங்களுடைய ஊரில் சுவரொட்டிக்கே வேறொரு அர்த்தமுண்டு.
விஜய் சேதுபதி: உங்களுடைய படங்களில் காமெடிக் காட்சிகளை ரசிப்பதற்குள் 5- 6 காமெடி தொடர்ந்து வந்துவிடுகிறது. பேச்சும் சரி அனைத்துமே இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாமே. இது எனது வேண்டுகோளாகச் சொல்கிறேன் சார்..
கமல்: நீங்கள் சொல்லும் படத்தை 'மைக்கேல் மதன காமராஜன்' என்று எடுத்துக் கொள்வோமே. அந்தப் படம் அனைவருக்கும் புரியப் போய் தானே மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். இன்னும் 2 ஜோக் மிஸ் ஆகிவிட்டது என்று மீண்டும் பார்க்க வைப்பது எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு. தாழ்மையாக நான் சொல்வது என்னவென்றால், ஒரு முறை பார்த்துவிட்டு இதுதான் நான் பண்ணிவிட்டேனே என்று சேதுபதி நினைத்துவிடக் கூடாது அல்லவா. அடங்கேப்பா இன்னும் இருக்கா என்று அடுத்த முறை பார்க்கும்போது அது புரிந்து என்னை அண்ணனாக ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லையா. அது எனக்கு ரொம்ப முக்கியம். அது புரிந்துவிடும், அப்படி புரியவில்லை என்றால் சேதுபதி எடுத்துச் சொல்லிவிடுவார் அதை.
கலைஞரே, ஒளவையாரோ, பாரதியாரோ அல்லது பாரதிதாசனோ புரியணும், புரியணும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள். பயப்படவே இல்லை. பாரதியாரிடம் 'காற்று வெளியிடை கண்ணம்மா' பாடலுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம். நான் இப்படித்தான். இதைப் புரிந்து கொள்வார்கள். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது. புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்.
விஜய் சேதுபதி: ஸாரி சார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...