Published : 02 May 2020 01:02 PM
Last Updated : 02 May 2020 01:02 PM

கரோனா பாதித்த பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பிரசவம்: தமிழக அரசுக்கு லாரன்ஸ் நன்றி

கரோனா பாதித்த பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பிரசவம் நடந்தது. தமிழக அரசுக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் அவதியுறும் மக்களுக்கும், திரையுலகத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். தற்போது அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்களிடம் பொருளுதவியாகக் கோரியுள்ளார். அதை வைத்து மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ரஜினி 100 மூட்டைகள் அரிசி கொடுத்துள்ளார்.

இதனிடையே தனக்குத் தெரிந்த, கரோனா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பிரசவம் நடந்ததற்காக, தமிழக அரசுக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

"இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் 9 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்குப் பிரசவம் நடக்கும் நிலையில் நிலையில் இருந்தார். எனவே அவரது கணவரும், மாமனாரும் என்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனைக்குச் செல்ல உதவி கேட்டார்கள்.

இத்தகவலை நான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாரின் பி.ஏ.வான ரவி சாருக்குத் தெரிவித்தேன்! அவர் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட நண்பரின் இல்லத்திற்கே நேரில் சென்று, அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தார்.

அப்பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்து தாயையும் குழந்தையையும் வெற்றிகரமாகக் காப்பாற்றினர். இந்தப் பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும் நலமாக உள்ளது.

"அப்பெண் கரோனாவிலிருந்து கூடிய விரைவில் குணமடைவார்" என்று மருத்துவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர். இந்த நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார் மற்றும் அவரது பி.ஏ. ரவி சாருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அத்துடன் மருத்துவர்கள் டாக்டர் ஜானகி, டாக்டர்.ஐஸ்வர்யா, டாக்டர் மது, டாக்டர் சாந்தி, டாக்டர் லாவண்யா ஆகிய அனைவரும் கடவுளுக்குச் சமமானவர்கள். அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும், தயவுசெய்து அப்பெண் கரோனாவிலிருந்து சீக்கிரமே குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்!".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x