Published : 29 Apr 2020 11:13 AM
Last Updated : 29 Apr 2020 11:13 AM
‘உன்னை ஆடியன்ஸ் திட்டப்போறாங்க பாரு. திட்டு வாங்கவைக்கிறேன்’ என்று இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா, நடிகர் மோகனிடம் தெரிவித்தார். சொன்னதுமாதிரியே நடந்தது. ஆனால் இன்னொரு அதிரிபுதிரி வெற்றியைச் சந்தித்தார் மோகன்.
1986ம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ வெளியானது. மோகன், ரேவதி, கார்த்திக் முதலானோர் நடித்த அந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அட்டகாசமான வெற்றியைச் சந்தித்தது. பின்னாளில் இந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்ட போது, அங்கே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதிலேயே இங்கே மோகனின் அமைதியான நடிப்பும் கார்த்திக்கின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் ரேவதியின் பிடிவாதமான இறுக்கமான நடிப்பும் எந்தளவுக்கு ரசிகர்களின் மனங்களை ஆக்கிரமித்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
86ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியானது ‘மெளன ராகம்’. திருமணமான கையுடன் விஷம் சாப்பிட்ட ‘அந்த 7 நாட்கள்’ அம்பிகாவையும், இங்கே விவாகரத்துக் கேட்ட ‘மெளனராகம்’ ரேவதியையும் ஒப்பிட்டார்கள். காதலன் பாக்யராஜுடன் சேர்த்துவைப்பதாகச் சொன்ன ராஜேஷ் கதாபாத்திரத்தையும் விவாகரத்து வழங்க முடிவெடுத்த மோகனின் கேரக்டரையும் சேர்த்துப் பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘மெளனராகம்’. படத்தின் இசையையும் இளையராஜாவையும் அவ்வளவு சாதாரணமாக கடந்துவிட முடியாது. பின்னணி இசையில் உச்சம் தொட்டிருப்பார் இளையராஜா.
‘அக்செப்ட்’ என்றொரு வார்த்தையை மிக எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அதனுள்ளே இருக்கிற அடர்த்தியையும் அன்பையும் தன் முகபாவங்களாலேயே நமக்குக் கடத்தியிருப்பார் மோகன். அவரின் மிகச்சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்திய படங்களில், ‘மெளனராகம்’ படத்துக்கு தனியிடம் உண்டு.
இந்தப் படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திராவின் ’ரெட்டைவால் குருவி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் மோகன். பாலுமகேந்திராவால் ‘கோகிலா’ மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மோகன். பிறகு ‘மூடுபனி’யில் ஒரு கேரக்டரிலும் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்தார்.
‘ரெண்டுபொண்டாட்டிக்காரன்’ கதை பாலுமகேந்திராவுக்கு கைவந்தகலை. ‘மறுபடியும்’, ‘சதிலீலாவதி’ என ஒவ்வொரு பரிணாமம் காட்டியிருக்கிற பாலுமகேந்திராவுக்கு, ‘ரெட்டைவால்குருவிதான்’ ‘ரெண்டுபொண்டாட்டிக்காரன்’ கதையின் ஆரம்பம்.
காட்சிகளாலேயே சிரிக்கவைப்பது என்பது மிகுந்த சிரமத்துக்கு உரிய பணி. ‘ரெட்டைவால் குருவி’ அப்படி காட்சிகளாலேயே நம்மை கலகலப்பாக்கியது. மோகனுக்கு அர்ச்சனா என்றொரு மனைவி இருந்தும் பிறகு ராதிகாவையும் திருமணம் செய்துகொண்டு வாழ்வார். இங்கேயொரு குடித்தனம், அங்கேயொரு குடித்தனம். இங்கே அது தெரியாமலும் அங்கே இது தெரியாமலும் பார்த்துக்கொள்வார் மோகன். அந்தத் தவிப்பையும் தகிடுதத்தத்தையும் அழகாக ஸ்கோர் செய்திருப்பார் மோகன்.
’மெளனராகம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த வேளையில், ‘ரெட்டைவால் குருவி’ படப்பிடிப்பு. தளத்தில் ஒருநாள் பாலுமகேந்திரா, ‘என்ன மோகன்... அமைதியா, அன்பா இப்படியொரு புருஷன் வேணும்’னு ‘மெளனராகம்’ படம் பாத்துட்டு உன்னை எல்லாரும் கொண்டாடுறாங்க. என் படம் (ரெட்டைவால் குருவி) வரட்டும். உன்னைக் கொண்டாடினவங்களும் கூட, உன்னை கன்னாபின்னானு திட்டப் போறாங்க. அப்படி உனக்கு திட்டு வாங்கவைக்கிறேன் பாரு’ என்று மோகனிடம் சொன்னார். இதைக்கேட்டு இருவரும் சிரித்துவிட்டார்கள்.
பாலுமகேந்திரா சொன்னபடி ‘ரெட்டைவால் குருவி’ படம் வந்ததும், ‘ரெண்டுபொண்டாட்டிக்காரன்’ கேரக்டரில் நடித்த மோகனைத் திட்டாதவர்களே இல்லை. குறிப்பாக, பெண்களிடம் இருந்துதான் வசவுகள் வந்தன. ஆனால் என்ன... ‘ரெட்டைவால் குருவி’யைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள். மோகனின் நடிப்பை ரசித்துப் பாராட்டினார்கள்.
அமைதியாய் நடித்த ‘மெளனராகம்’ எந்த அளவுக்கு வெற்றிபெற்றதோ... கலகலப்பில் ஸ்கோர் செய்த ‘ரெட்டைவால் குருவி’யும் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றது.
‘உதயகீதம்’ படத்தில் மோகனைக் கொல்ல ரேவதி முயற்சி செய்வார். ‘டிசம்பர் பூக்கள்’ படத்தில் மோகன் ரேவதியைக் கொல்ல முனைவார். இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 86ம் ஆண்டு ‘மெளனராகம்’ படத்தையும் மோகனின் ஆகச்சிறந்த நடிப்பையும் ஏற்றுக்கொண்டு கொண்டாடிய ரசிகர்கள், 87ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று வெளியான ‘ரெட்டைவால் குருவி’யையும் ரசித்துக் கொண்டாடினார்கள்; சிரித்துக் கொண்டாடினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT