Published : 28 Apr 2020 02:27 PM
Last Updated : 28 Apr 2020 02:27 PM

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீட்டு சர்ச்சை: 'மெர்சல்' தயாரிப்பாளர் புதிய யோசனை; தயாரிப்பாளர்கள் மீதும் குற்றச்சாட்டு

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீட்டு சர்ச்சை தொடர்பாக 'மெர்சல்' தயாரிப்பாளர் முரளி புதிய யோசனை தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், இப்படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.

இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஆடியோ பதிவு வெளியிடுவதும், அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்‌த் திரைப்படங்களை டிஜிட்டலில்‌ வெளியிடும்‌ முறைக்கு தயாரிப்பாளர்கள்‌ தள்ளப்பட்டுள்ளார்கள்‌ என்பதே நிதர்சனமான உண்மை.

கரோனாவின்‌ கோரத் தாண்டவத்தில்‌ உலகமே சிக்கித் தவிக்கையில்‌, திரையரங்குகள்‌ மூடிக்கிடக்கும்‌ இந்தச் சூழ்நிலையில்‌. தயாரிப்பாளர்கள்‌ தங்கள்‌ பணத்தை முதலீடு செய்து, படத்தைத் தயாரித்து, அதை வியாபாரம்‌ செய்ய முடியாமல்‌ தவிக்கும்‌போது. ஓடிடி (OTT) பிளாட்பார்ம்‌ என்பது காலத்தின்‌ கட்டாயம்‌ ஆகிறது.

பெரிய படங்களுக்குத் திரையரங்குகள்‌ எப்படி அதிகமாகக் கிடைக்கிறதோ அதேபோல்‌ டிஜிட்டலில்‌ வெளியிடப் பெரிய படங்களை மட்டும்தான்‌ அவுட்ரைட்‌ முறையில்‌ விற்க முடிகிறது.

ஆனால்‌, சிறு முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகளும்‌ கிடைப்பதில்லை. டிஜிட்டல்‌ மார்க்கெட்டிலும்‌ அவுட்ரைட்‌ முறையில்‌ விற்க முடிவதில்லை. இந்த நிலை மாறவேண்டும்‌.

நம்‌ சங்க உறுப்பினர்களுக்காகப் பேச வேண்டியவர்கள்‌ தங்கள்‌ பதவியை வைத்து தன்னுடைய படங்கள்‌, தன்னைச் சார்ந்தவர்களுடைய பெரிய, சிறிய, மிகச்சிறிய என எல்லா படங்களையும்‌ அவுட்‌ ரைட்டாக விற்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால்‌, ஏதாவது பிரச்சினை என்றால்‌ அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உதவி செய்ய, குரல்‌ கொடுக்க சிறு படத் தயாரிப்பாளர்கள்‌ தேவைப்படுகிறார்கள். அப்படிப் பட்டவர்கள்‌, இவர்கள்‌ படங்களை விற்றபோது கூடவே ஐந்து சிறு படத் தயாரிப்பாளர்களின்‌ படங்களையும்‌ விற்றுத் தர ஏற்பாடு செய்திருக்கலாம்‌. ஆனால்,‌ அப்படிச் செய்யவில்லை. இது என்ன நியாயம்‌... ? இதற்கு என்னதான்‌ முடிவு... ?

ஒரு சிலர்‌ குழுவாகச் சேர்ந்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வெளியிடும்‌ அறிக்கை, 1300 தயாரிப்பாளர்களுக்கும்‌ சாதகமாக அமைய வேண்டுமே தவிர, சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும்‌ ஏற்படுத்தி விடக்கூடாது. ஆகவே அனைத்துத் தரப்பினரையும்‌ கலந்து பேசி நாம்‌ ஒரே குரலாக ஒலித்திருக்க வேண்டும்‌.

அவசர கதியில்‌ சிறு படத் தயாரிப்பாளர்கள்‌, பெரிய படத் தயாரிப்பாளர்கள்‌ என அனைவரது கருத்தையும்‌ கேட்காமல்‌ ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துகளை அனைத்துத் தயாரிப்பாளர்களின்‌ கருத்தாக ஒலிப்பது தவறு. இப்போது எடுக்கப்படும்‌ முடிவு என்பது இனிவரும்‌ காலங்களில்‌ சிறிய படங்களை விற்பனை செய்வது என்பது சுலபமானதாக மாற வேண்டும்‌. இந்த OTT வியாபாரத்தை வரைமுறைப்படுத்தி வியாபார ஒழுங்கைக் கொண்டு வர வேண்டும்‌. அதாவது எந்த ஒரு நிறுவனம்‌ டிஜிட்டல்‌ வெளியீட்டிற்காக. பெரிய பட்ஜெட்‌ படம்‌ ஒன்றை வாங்குகிறதோ அந்த நிறுவனம்‌ ஐந்து சிறு முதலீட்டுப் படங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும்‌. அதனை அந்த பெரிய படத்தை விற்கும்‌ தயாரிப்பாளரும் உறுதி செய்ய வேண்டும்‌ என்று ஒரு வரைமுறையைக் கொண்டு வர வேண்டும்‌.

அதற்குப் பெரிய தயாரிப்பாளர்கள்‌ ஒத்துழைக்க வேண்டும்‌. இதனை நம்‌ சங்கத்தின்‌ மூலம்‌ நடைமுறைப்படுத்தக் கேட்டுக்கொள்ள வேண்டும்‌. இதற்கு நம்‌ தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு அளித்தால்‌, வருடத்திற்கு 25 பெரிய படங்கள்‌ வியாபாரமானால்‌ 125 சிறிய படங்கள்‌ சிரமமில்லாமல்‌ வியாபாரமாகும்‌. இது இப்போது மட்டுமல்லாமல்‌ வருங்காலத்திலும்‌ சிறிய படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெறச்செய்ய வழிவகுக்கும்‌.

எந்த ஒரு பிரச்சினையிலும்‌ பெரிய படத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே போராடும்‌ நாம்‌, சிறு படங்களின் தயாரிப்பாளர்களையும்‌ கருத்தில்‌ கொண்டு அவர்களும்‌ நன்மை அடையக்கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும்‌. பெரிய, சிறிய என்ற பாகுபாடு பாராமல்‌ டிஜிட்டல்‌ பிளாட்பாரத்தில்‌ வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியது காலத்தின்‌ கட்டாயம்‌ என்பதை உணர வேண்டிய தருணம்‌ இது. "நீங்களும்‌ வாழுங்கள்‌ சிறு படத்தயாரிப்பாளர்களையும்‌ வாழ விடுங்கள்‌”

இந்த நேரத்தில்‌ திரையரங்கு உரிமையாளர்களும்‌ தயாரிப்பாளர்களின்‌ சுமையைக் கருத்தில்‌ கொண்டு, தயாரிப்பாளர்களும்‌, திரையரங்க உரிமையாளர்களும்‌. விநியோகஸ்தர்களும்‌ ஒன்று கூடி பேசி ஒரு சுமுகமான வியாபார சூழ்நிலை உருவாக ஒத்துழைக்க வேண்டும்‌. மேலும்,‌ தயாரிப்பாளர்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கைகளில்‌ ஒன்றான இணைய டிக்கெட் முறையை அனைத்துத் திரையரங்குகளிலும்‌ அறிமுகப்படுத்தி வியாபாரத்தின்‌ வெளிப்படைத் தன்மையைத் திரையரங்கு உரிமையாளர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌"

இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x