Published : 25 Apr 2020 06:06 PM
Last Updated : 25 Apr 2020 06:06 PM
எப்போதுமே நிலைமை உங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு எதுவுமே இல்லாமல் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். எப்போதுமே சென்னையில் வீட்டிலிருந்தால் அங்கேயே இசையமைக்கும் பணிகளை மேற்கொள்வார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கூடியமானவரை இருந்த இடத்திலேயே தொழில்நுட்பத்தின் வாயிலாக தனது பாடல் பதிவு வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுவார். தற்போது நடிகை நடிகை குல் பனாக், 'கூல் டெக்' என்ற தொடர் வீடியோ பேட்டிகளை எடுத்து வருகிறார். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி பல்வேறு விருந்தினர்களிடம் கேட்டு வருகிறார். இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் பேட்டியளித்துள்ளார்.
அதில் வெளியூருக்குச் செல்லும்போது, அங்கு எப்படி இசையமைப்பீர்கள் என்ற கேள்விக்கு "ஒரு காலத்தில் நான் நிறைய கருவிகளோடுதான் எங்கும் செல்வேன். அதை விமானத்தில் கொண்டு செல்லக் கூடுதலாக 3000 பவுண்ட் வரை கட்டியிருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு என் ஐபேட் போதும். என்னுடன் ஒரு லேப்டாப்பையும், கீபோர்டையும் கொண்டு செல்கிறேன். எங்கிருந்தும் வேலை செய்ய எனக்கு அது போதும். செயலிகள் மூலம் ஹார்மனி, லூப், தம்புரா உள்ளிட்ட விஷயங்களை இயக்குகிறேன். சில நேரங்களில் எனது ஐபேடில் இசையமைத்து அதை எனது ஐபோனில் பதிவு செய்து கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளிக்கையில், "இன்று சமூக ஊடகங்களில் மக்கள் அவர்களின் கோபத்தை, விரக்தியை, உள்ளுக்குள் இருக்கும் அரக்கனைக் காட்டுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதற்காக மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பதனால். நாம் உயர்ந்த விஷயங்களை நோக்கி முன்னேறுவதை விட்டுவிட்டு மீண்டும் ஆதி காலத்துக்குச் செல்கிறோமோ என்று சில சமயங்களில் நினைக்கிறேன். இந்த சமூக ஊடகங்களுக்கு நமது கவனம் தொடர்ந்து தேவையாயிருக்கிறது. அதை நாம் தருகிறோம்.
விஸ்வாமித்திரரை மயக்க நினைத்த அழகான பெண்ணின் கதை நினைவிலிருக்கிறதா? நான் பெண்களைப் பற்றி தவறாகப் பேசவில்லை. அதை ஒரு உருவகமாகச் சொல்கிறேன். நமது தீமைகளை எப்படி விலக்கி வைக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிய வேண்டியது முக்கியம்.
இந்தத் தீமைகள், பல வழிகளில், இணையத்தில் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படுகிறது. நாம் ஏன் யார் யாரை அடிக்கிறார்கள், யாரைக் குறிவைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்? ஏன் தூண்டப்பட்டு அதற்கு எதிர்வினையாற்றுகிறோம்? நீங்கள் என்ன பகிர்ந்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறதா? ஒரு நாள் மாட்டிக்கொண்டு உங்கள் வேலை போனால் என்ன செய்வீர்கள்? எப்போதுமே நிலைமை உங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நான் என்ன செய்தாலும் அதை என் குழந்தைகள் பின்பற்றுவார்கள். நானே ஒரு விஷயத்தைப் பின்பற்றவில்லை என்றால் எப்படி அவர்களை அதைச் செய்யச் சொல்லிக் கேட்க முடியும். உங்கள் குழந்தைகளைத் தேவதைகளாக்குங்கள், அரக்கர்களாக அல்ல" என்று பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT