Published : 25 Apr 2020 01:48 PM
Last Updated : 25 Apr 2020 01:48 PM
சமூக விலகல் இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்று இயக்குநர் வசந்தபாலன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலை மேலும் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உடனடி அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சென்னையில் காலை முதலே கடைகளில் கூட்டம் அதிகரித்துவிட்டது. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதற்றத்தை உண்டாக்கி விட்டது.
காலை சென்னை கேகே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகைக் கடைகளும் காய்கறிக் கடைகளும் நிறைந்து வழிந்தன. போக்குவரத்து நெரிசலே ஏறபட்டுவிட்டது. கரோனா நம்மைத் தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதற்றமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன்.
காலை 8:30 மணிக்கு சிறிய காய்கறிக் கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள்.மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூக விலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பதுதான் வருத்தம் தருகிறது"
இவ்வாறு இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT