Published : 25 Apr 2020 12:50 PM
Last Updated : 25 Apr 2020 12:50 PM
'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான, 'மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக, ஹாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும் அனைத்துப் படங்களின் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் சகஜ நிலை திரும்பினாலும், மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பதே சந்தேகம் என்ற நிலை இருப்பதால் பல்வேறு ஹாலிவுட் படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்' படம் மே 2021 வெளியீடாக இருந்து நவம்பர் 2021 வெளியீடாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மார்ச் 25, 2022 ஆம் தேதிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெனடிக்ட் கம்பர்பேட்ச் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ஸ்காட் டெரிக்ஸனே இயக்குவதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளராக மட்டுமே செயல்படவுள்ளார். அவருக்குப் பதிலாக 2002- ம் ஆண்டு முதல் 2007 வரை வெளியான 'ஸ்பைடர்மேன்' படங்களை இயக்கிய சாம் ரெய்மி இயக்குகிறார்.
சோனி பிக்சர்ஸ் தனது அடுத்த இரண்டு 'ஸ்பைடர்மேன்' படங்களின் வெளியீட்டையும் ஒத்திவைத்துள்ளன. இதில் ஒரு படம் மார்வலுடன் இணைந்து தயாரிக்கும் படம் என்பதால் அந்தக் கதையின் சம்பவங்கள் மற்ற மார்வல் படங்களின் கதைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2' வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் 'தோர்' படத்தின் நான்காம் பாகமான, 'லவ் அண்ட் தண்டர்' படத்தின் வெளியீடு ஒரு வாரம் முன்னதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18, 2022 அன்று வெளியாகவிருந்த இந்தப் படம், ஒரு வாரம் முன்னதாக, பிப்ரவரி 11, 2022 அன்று வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT