Published : 25 Apr 2020 10:53 AM
Last Updated : 25 Apr 2020 10:53 AM
'பொன்மகள் வந்தாள்' படம் டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.
இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 2டி நிறுவனத்தின் இந்த முடிவு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர் சங்கச் செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
"'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் OTT ப்ளாட்பார்மில் விற்பனையாகி இருப்பதாகவும், அது திரையரங்கில் வெளியாவதற்கு முன்னே அங்கு வெளியாகும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. அதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்ட படங்கள், திரையரங்குகளில் வெளியான பின்புதான் இதர இடங்களில் வெளியாக வேண்டும் என்பதுதான் விதி. அதை மீறி தயாரிப்பாளர் OTT ப்ளாட்பார்மிற்கு கொடுத்துவிட்டார்.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்தத் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு வேண்டாம் என்று சொன்னோம், அவர் கேட்கவில்லை. அதை மீறி அவர் திரையிடும் பட்சத்தில், அந்த நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் அனைத்துப் படங்களையும் OTT ப்ளாட்பார்மிலேயே வெளியிடக் கூறியுள்ளோம். அந்தப் படங்கள் எங்களுடைய திரையரங்குகளுக்குத் தேவையில்லை என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் விருப்பம். இதுதான் எங்களுடைய முடிவு".
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் விடுத்துள்ள வீடியோ பதிவு வெளியான சில மணித்துளிகளில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"'பொன்மகள் வந்தாள்' படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியிட விற்ற காரணத்திற்காக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நிலைப்பாடு. இங்கு பணம் முதலீடு செய்த ஒரு தயாரிப்பாளராக, முதலில் தயாரிப்பாளருக்குத் தொழில் சுதந்திரம் தேவை. அந்தப் பொருளை எங்கு விற்கலாம், எங்கு வெளியிடலாம் என்பது தயாரிப்பாளரின் இறுதி முடிவு.
இன்றைய காலசூழலில் முதல் போட்ட பணத்தை அசல் எடுத்தாலே போதும் என்ற சூழல்தான் இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. 100க்கு 99 சதவீதம் தயாரிப்பாளர்களின் நிலை அதுதான். இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு வியாபாரம் டிஜிட்டல் ப்ளாட்பார்மிலிருந்து வரும்போது, அதை ஒரு தயாரிப்பாளராகப் பயன்படுத்திக் கொள்வதே வியாபாரத் திறமை. அதற்கு முட்டுக்கட்டை போடுவதையோ, குறை சொல்வதையோ நாம் புறந்தள்ளியிருக்க வேண்டும்.
முதலில் ஒரு தயாரிப்பாளர் வெற்றிகரமாக வியாபாரம் செய்கிறார் என்றால், அவரிடமிருந்து விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்குக் கரம் கொடுத்து, தோள் கொடுத்து வாழ்த்தலாம். நாமே ஒரு சக தயாரிப்பாளரைக் குறை சொல்வது நாகரிகமாகத் தெரியவில்லை. இதே பிரச்சினை தயாரிப்பாளர்களாகிய நமது ஒவ்வொருவருக்கும் வரலாம். இதனைச் சிந்தித்து நமது தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஜெயிக்க வேண்டும். இதில் காழ்ப்புணர்ச்சி கூடாது. நம்மைத் தொழில் செய்ய விடமாட்டார்கள் என்று ஒதுங்கினீர்கள் என்றால், இதைவிட ஒரு தவறான செயல் எதுவுமே இருக்க முடியாது.
ஒற்றுமையாக இருந்து வெற்றி காண்பதே வியாபர யுக்தி, வியாபாரத் திறன். அதற்குதான் தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து நாமே நம் ஆட்களைக் குறை சொல்லக் கூடாது. ஒற்றுமையாக இருந்து இந்தப் பிரச்சினையைக் கையாள்வோம்".
இவ்வாறு ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திரையரங்கு உரிமையாளர்கள் விடுத்த இந்த எச்சரிக்கையால், 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருப்பது 'சூரரைப் போற்று' படம்தான். இந்தப் படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் உருவாகவுள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வீடியோ பதிவின் மூலம் தெளிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment