Published : 24 Apr 2020 09:26 PM
Last Updated : 24 Apr 2020 09:26 PM
வீட்டிலிருந்து வேலை செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் பின்பற்றும் 6 விஷயங்கள் என்ன என்பதைத் தெரிவித்துள்ளார்.
நடிகை குல் பனாக், கூல் டெக் என்ற தொடர் வீடியோ பேட்டிகளை எடுத்து வருகிறார். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி பல்வேறு விருந்தினர்களிடம் கேட்டு வருகிறார். இந்தப் பேட்டி இன்ஸ்டாகிராம் தளத்தில் நேரலையில் பகிரப்பட்டு வருகிறது.
அப்படி சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பேட்டியில் விருந்தினராகக் கலந்துகொண்டார். வீட்டிலிருந்து வேலை செய்வது பற்றிப் பேசிய ரஹ்மான், "நீண்ட காலமாகவே நான் வீட்டிலிருக்கும் ஸ்டுடியோவிலிருந்துதான் பணியாற்றுகிறேன். ஒரு விஷயத்தை நான் உணர்ந்திருக்கிறேன். படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட வேலை என்று வரும்போது நாம் வலுக்கட்டாயமாக வேலை செய்யமுடியாது. மிகப்பெரிய யோசனை ஐந்து நிமிடங்களில் தோன்றலாம். அல்லது ஒரு வருடமும் ஆகலாம். நான் பின்பற்றும் விஷயங்கள் இவைதான்" என்று ஆறு விஷயங்களை ரஹ்மான் பட்டியலிட்டுள்ளார்.
1. மனநல ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியம். நன்றாகத் தூங்குங்கள், சாப்பிடுங்கள். அதிகம் சாப்பிடாதீர்கள். உங்கள் மனதுதான் முக்கியமான விஷயம். அதைத் தூய்மையாக வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களது வேலை கெட்டுவிடும். உங்களிடம் எவ்வளவு உயரிய தொழில்நுட்பம் இருந்தாலும் சரி, அது உங்கள் மன, உடல் ஆரோக்கியத்துக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்த பிறகே இருக்க வேண்டும்.
2. தூய்மையாக, சுகாதாரமாக இருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்தாலும், அதற்கான உடையை உடுத்துங்கள். எனது அலுவலகத்தில் இரவில் நான் வேலை செய்யும்போது கூட நான் வீட்டில் அணியும் சகஜமான உடைகளை அணியமாட்டேன். எனது குடும்பத்தினர் எனது ஸ்டுடியோவுக்குள் வந்தால் கூட அதற்கேற்றார் போல உடை அணிவார்கள். வீட்டிலேயே இருந்தாலும் கூட, வீட்டுக்கும், வேலை செய்யும் பகுதிக்கும் வித்தியாசம் இருப்பது முக்கியம்.
3. வேலை செய்யும்போது மொபைல், ஈமெயில் செய்தி என அனைத்தையும் அணைத்து வைப்பேன். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது 'வரி கட்டுங்கள்' என்று ஒரு செய்தி வந்தால் அது என் கவனத்தைச் சிதறடிக்கும். மொபைல்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வேலை செய்யும் அந்த ஒரு மணிநேரம், உங்கள் உள்ளுணர்வுக்குள் ஆழமாகச் சென்று வேலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
4 . மேற்சொன்ன விஷயத்தைப் பின்பற்றி, வேலை முடிந்ததும் மற்றவர்களிடம் பேசுங்கள். அப்போதுதான் வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும். வழக்கத்தில் கொண்டு வருவது முக்கியம். எனது குழந்தைகளின் சிறு வயதில் மிகக் கடினமாக இருக்கும். ஏனென்றால் என் பெண் ரஹீமா வந்து, எனது இசைக் கருவிகள், கம்ப்யூட்டர்களில் ஏதாவது விளையாடிவிடுவார். இப்போது நாங்கள் அதை நினைத்துப் பார்த்துச் சிரிக்கிறோம்.
5 . நான் வேலை செய்யும் இடத்தில் ஊதுவத்தியோ, மெழுகுவர்த்தியோ ஏற்றி வைப்பேன். உள்ளே வருபவர்கள் நல்ல அதிர்வுகளை உணர்வார்கள். அவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். அந்த இடம் ஒரு கோயில் போலத்தான். நமது வேலை ஆன்மிக இடத்துக்குத் தொடர்புடையதைப் போலத்தான்.
6. நான் பல தொழில்நுட்பங்களை, கருவிகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால், இறுதியில் எனது அறிவு என்பது ஒரு கூட்டு உணர்விலிருந்து, எல்லையற்ற ஒரு சக்தியிலிருந்து கிடைக்கிறது எனக்குத் தெரியும். நாம் அனைவரும் பல்வேறு விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதற்கு வித்தியாசமான பெயர்களைத் தருகிறோம். ஆனால் அதெல்லாம் ஒரு இடத்திலிருந்து தான் வருகிறது. இதைப் பற்றிப் பேசும்போது (கடவுள், மதம்) போன்ற விஷயங்களை வைத்து நாம் தொடர்ந்து சண்டையிடுவது துரதிர்ஷ்டவசமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT