Published : 23 Apr 2020 07:50 PM
Last Updated : 23 Apr 2020 07:50 PM
2018-ஆம் ஆண்டு அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வெளியான 'ரெய்ட்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. 'ரெய்ட்' படத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து பல்வேறு படங்களை வரிசையாக உருவாக்கவும் தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர்.
ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் வெளியான 'ரெய்ட்', உண்மையிலேயே இந்தியாவில், ஒரு பெரிய அரசியல்வாதியின் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இதுவரை இந்திய வரலாற்றில் நீண்ட நேரம் நடந்த சோதனை என்று இது நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 18 மணி நேரங்களுக்கும் அதிகமாக இந்த சோதனை நடந்தது.
இந்தப்படத்தின் வெற்றி தற்போது இரண்டாம் பாகத்துக்கு வித்திட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள டி-சீரிஸ் நிறுவனத் தலைவரும், தயாரிப்பாளருமான பூஷண் குமார், "'ரெய்ட்' படத்தின் வெற்றி, மக்கள் இது போன்ற புத்திசாலித்தனமான படங்களை வரவேற்கிறார்கள் என்பதை நிரூபித்தது. நாங்களும், அஜய் தேவ்கனும், இன்னொரு தயாரிப்பாளர் குமாரும் இணைந்து, 'ரெய்ட்' படத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்டமான திரைப்பட வரிசையை ஆரம்பிக்கலாமா என்று பேசி வருகிறோம். இரண்டாம் பாகத்தின் திரைக்கதை வேலைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.
கதைக்கு முக்கியத்துவமுள்ள படத்தையே என்றும் ரசிகர்களுக்குக் கொடுக்க விரும்புகிறோம். இந்த இணையின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கு நாங்கள் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதிலும் குறிப்பாக எங்களது முந்தைய படமான 'தன்ஹாஜி'யின் வெற்றிக்குப் பிறகு இது கூடியுள்ளது. 'ரெய்ட்' படத்தின் இரண்டாம் பாகத்தைச் சரியான திசையில் எடுத்துச் செல்ல நாங்கள் அயராது உழைப்போம் என்று ரசிகர்களிடம் உறுதியுடன் கூறுகிறேன்" என்று பேசியுள்ளார்.
அடுத்த வருடம் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT