Published : 23 Apr 2020 01:55 PM
Last Updated : 23 Apr 2020 01:55 PM

லாக்டவுனில் தனது படங்கள் ஒளிபரப்பு: அப்பாவின் ஆலோசனை நினைவு கூரும் மோகன் ராஜா

லாக்டவுனில் தனது படங்கள் ஒளிபரப்பு குறித்து நெகிழ்ச்சி அடைந்துள்ள மோகன் ராஜா, தனது அப்பாவின் ஆலோசனையை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், திரையுலக பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

இந்த நேரத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுடைய டி.ஆர்.பியை அதிகப்படுத்திக் கொள்ள ஹிட்டடித்த படங்களாகத் திரையிட்டு வருகின்றன. தற்போது பல தொலைக்காட்சிகளில் காலை 9 மணிக்கெல்லாம் படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிவிடுகிறார்கள்.

இவ்வாறு ஒளிபரப்பப்படுவதில் தான் இயக்கி படங்களும், தன் தம்பி நடித்த படங்களும் அதிகப்படியாக ஒளிபரப்படுவது தொடர்பாக இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம் "அப்பா, இப்போது கே டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'தனி ஒருவன்' படத்தையும் சேர்த்து நீங்கள் இயக்கிய 8 படங்கள் ('ஜெயம்', 'எம். குமரன்','உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி', 'வேலாயுதம்', 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்') மற்றும் சித்தப்பா நடித்த 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'அடங்க மறு', 'வனமகன்', 'கோமாளி' என்கிற படங்கள் கடந்த லாக்டவுன் 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்" என்று தான் குறித்து வைத்ததைக் காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்

இந்த லாக்டவுன் என்கிற கடின நாட்களில், எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கிவிடவேண்டும் என்று நான் ஆகாயத்தில் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில் குரு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து "ஆடியன்ஸ் தான் நம்ம கடவுள், அவங்கள திருப்தி பண்ற படங்களை மட்டுமே எடு" என்கிற மந்திரத்தைத் தலையில் அன்றே ஏற்றியதே நினைவுக்கு வருகிறது.

இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தைப் பூரிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான். படங்களில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் மற்றும் ஒளிபரப்பும் அத்தனை ஊடகங்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். மோகன் ராஜாவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் "இந்த அற்புதமான பயணத்தில் உங்களுடன் பயணிப்பது ஆசீர்வாதம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x