Published : 21 Apr 2020 02:56 PM
Last Updated : 21 Apr 2020 02:56 PM
மருத்துவர் சைமன் மறைவு தொடர்பாக, மக்கள் சார்பில் மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் சசிகுமார்.
சென்னையில் கரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சசிகுமார் தனது ட்விட்டர் பதிவில் வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கரோனா வைரஸ் கொடிய தொற்று. ஒன்றரை மாதமாக நம்மை வீட்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாம் அவர்களுடைய உயிரைப் பணயம் வைத்து நமது உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கேள்விப்படும் சம்பவங்கள் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது.
உயிரைக் காப்பாற்றுபவர்களை நாம்தான் மதிக்க வேண்டும். காப்பாற்றிக் கொண்டிருப்பவர்களையும் மதிக்க வேண்டும். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மக்கள் சார்பாக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. நடக்கவே விடக்கூடாது. நம்மைப் பாதுகாக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதுதான் மனிதம். மனிதம் வளர வேண்டும்".
இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.
#மருத்துவர்களே_கடவுள் #DoctorsAreGod pic.twitter.com/qekUxPlo4x
— M.Sasikumar (@SasikumarDir) April 20, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT