Published : 20 Apr 2020 08:31 PM
Last Updated : 20 Apr 2020 08:31 PM
தனது படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட புகைப்படத்துக்காக பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளார் துல்கர் சல்மான்.
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திலும் இதர மொழி பேசுபவர்களும் இந்தப் படத்தைக் கண்டுகளித்தனர். இப்போது அதுவே இந்தப் படத்துக்குப் பிரச்சினையாக வந்துள்ளது.
இந்தி திரையுலகில் பத்திரிகையாளராக இருக்கும் சேத்னா கபூர் தனது ட்விட்டர் பதிவில், "அன்பார்ந்த துல்கர் மற்றும் அவரது வேஃபேரர் தயாரிப்பு நிறுவனத்துக்கு...
உங்கள் படத்தில் என்னைப் பங்குபெற வைத்ததற்கு நன்றி. ஆனால் பொதுவெளியில் என் புகைப்படத்தை வைத்து உருவ கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தப் புகைப்படம் எனது அனுமதி இல்லாமல், எனக்குத் தெரியாமல் உங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் அதற்கு உரிமை கோர விரும்புகிறேன்” என்று பதிவிட்டார்.
மேலும், இது தொடர்பாக படக்குழுவினர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கண்டிப்பாக வழக்குத் தொடர்வேன் என்றும் குறிப்பிட்டார்.
'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் 2 இடங்களில் சேத்னா கபூர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனாலேயே இந்தப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சேத்னா கபூர் ட்வீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில், "இதற்கு நாங்கள் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்தப் புகைப்படங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதைச் சம்பந்தப்பட்ட துறை ஆட்களிடம் விசாரிக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு, என் தரப்பிலிருந்தும், எனது தயாரிப்பான இந்தப் படத்தின் தரப்பிலிருந்தும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது எந்த நோக்கத்துடனும் செய்யப்பட்டதல்ல" என்று தெரிவித்துள்ளார்.
We take full responsibility for the error on our behalf. Will look into it with concerned departments of the film to understand how the images were sourced. I apologise from my end and from the film as well as @DQsWayfarerFilm for any difficulties caused. It wasnt intentional.
— dulquer salmaan (@dulQuer) April 20, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT