Published : 19 Apr 2020 10:42 AM
Last Updated : 19 Apr 2020 10:42 AM
மதுரை காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலராக பணிபுரிந்துள்ளார் சசிகுமார். மேலும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், சிலர் காவல்துறையினருடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
அவ்வாறு மதுரை காவல்துறையினருடன் இணைந்து சசிகுமார் தன்னார்வலராக பணிபுரிந்து இருக்கிறார். அவருடைய பணிகள் மற்றும் வேண்டுகோள் அனைத்தையும் இணைத்து மதுரை காவல்துறையினர் ஒரு விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து சரி செய்துள்ளார். மேலும், போக்குவரத்தில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு நடுவே பேசும் போது சசிகுமார், "144 தடை உத்தரவு என்பது வெளியே வரக்கூடாது. வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். நம்ம அடிக்கடி வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வரணும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அனைவருமே வெளியே வந்து கொண்டே இருக்கிறோம்.
அனைவருமே வீட்டில் இருங்கள். நல்லதுக்குத் தான் சொல்கிறார்கள். வீட்டிலேயே இருங்கள். முதலில் வெளியே வருவதை நிறுத்த வேண்டும். வெயிலில் எவ்வளவு பேர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். காவல்துறையினர் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். 2 நாட்களாக பார்க்கிறேன். வெளியே கிடைப்பதைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்குப் போகாமல் இருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.
மேலும், பெண் காவலர்களின் பணிகள் குறித்து, "பெண் காவலர்கள் அதை பணியாக இல்லாமல் ஆத்மார்த்தமாக நமக்காக பண்ணுகிறார்கள். அப்படியென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும். கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூட கஷ்டப்படுகிறார்கள். தன்னை நோக்கி ஓடிவரும் குழந்தைகளைத் தொட்டால் அவர்களுக்கு ஏதேனும் வந்துவிடுவோம் என்ற பயம் வேறு அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தான் நிஜ ஹீரோக்கள். நம்மளும் பாதுகாப்பாக இருந்து, அவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்வோம்" என்று பேசியுள்ளார் சசிகுமார்.
வீடியோவின் இறுதியில் சசிகுமார் பேசும் போது, "காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். காவல்துறையினர் சொல்லியிருப்பது போல் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள், வீட்டிலேயே இருங்கள். அந்தத் தெருவை மூடியிருந்தால், அதற்குள்ளேயே இருங்கள். அதெல்லாம் நமது நல்லதுக்குத் தான் சொல்கிறார்கள். நம்மைப் பாதுகாக்கும் காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் சல்யூட்!" என்று பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT