Published : 14 Apr 2020 11:58 AM
Last Updated : 14 Apr 2020 11:58 AM
திரைப்படங்கள், ஆகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவை. நாடகத்தின் இன்னொரு வடிவமாக திரைப்படம் அந்த வேலையை சிரமேற்கொண்டு செய்யத் தொடங்கின. மாய உலகமும் கத்திச்சண்டைகளும் ஒரு அடிக்கு பத்துபேர் விழுவதும் நாயகன் டைவ் அடிப்பதும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த அதேசமயத்தில், ஒவ்வொரு ரசிகனும் சினிமாவுக்குள் வாழ்க்கைப் பாடங்களைத் தேடியதும் நடந்தது. அப்படியான வாழ்க்கையும் பாடமும்தான் ‘வியட்நாம் வீடு’ திரைப்படம்.
ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தின் சிக்கல்பிக்கல்களை,பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என பலரும் சொல்லி மக்கள் மனதில் பதிந்த காலகட்டத்தில், எழுபதுகளில், அந்தக் காலகட்டத்துக்குத் தக்கபடியான குணாதிசயங்களுடன் நடுத்தரக் குடும்பத்தின் எண்ண ஓட்டங்களை தெளிவுறச் சொன்னார் சுந்தரம். அந்தப் படம் ‘வியட்நாம் வீடு’. இதற்குப் பிறகுதான் அவர் வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார்.
கெளரவத்தையும் மரியாதையையும் கம்பீரத்தையும் தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழும் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்தார் சிவாஜி. வ.உசி.யாகவும் கட்டபொம்மனாகவும் மட்டுமின்றி, பாசமுள்ள அண்ணனாகவே வாழ்ந்தவருக்கு, வண்டிக்கார பாபுவாகவே வாழ்ந்தவருக்கு, அவலட்சண முகம் கொண்ட கோடீஸ்வரானாக தெய்வமகனிலும் அலட்சியம் கொண்ட பணக்காரனாக பார் மகளே பார் படத்திலும் ஒரு துரோகத்தின் குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதன் படத்திலும் என எண்ணற்ற படங்களிலும் எடுத்துக் கொண்ட கேரக்டர்களாகவே மாறிவிடுகிற சிவாஜிக்கு, பிரஸ்டீஸ் பத்மநாபன் கேரக்டர், திருநெல்வேலி அல்வா.
அந்த பாடி லாங்வேஜ், வயிறு தாண்டி கட்டியிருக்கும் வேஷ்டி, கண்ணாடியைக் கடந்து ஊடுருவிப் பார்க்கும் பார்வை, புறங்கை கட்டிக்கொண்டு நடக்கிற செளகரிய கம்பீரம் என பிராமணத் தந்தையாக, குடும்பத்தலைவனாகவே புது அவதாரம் எடுத்திருப்பார் சிவாஜி.
விதவை அத்தை மீது கொண்ட மரியாதை, பிள்ளைகளிடம் காட்டும் கறார், மனைவியிடம் காட்டுகிற வாஞ்சை, கம்பெனி மேலதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் மரியாதை, கீழே வேலை பார்ப்பவர்களிடம் காட்டுகிற கண்டிப்பு, சக மனிதர்களிடம் காட்டுகிற நேயம் என பிரஸ்டீஜ் பத்மநாபன், எழுபதுகளின் அப்பாக்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.
’பாலக்காட்டுப் பக்கத்திலே’ பாட்டுக்கு அவரின் மாடுலேஷனில் அப்படியொரு வெகுளித்தனம் தெரியும். அதே ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாட்டில், இயலாமையையும் ஏமாற்றத்தையும் கொட்டுவார். அந்த ‘நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு’ என்று ஆஸ்பத்திரிக்குக் கிளம்பும் போது சொல்வதாகட்டும், லஞ்சம் வாங்கி போலீசிடம் மாட்டிக்கொண்ட மகனின் சூழலைக் கண்டு, சம்பந்தி நீதிபதியிடம்...’ சம்பந்தி... நம்ம வீட்ல பிரஸ்டீஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து’ என்று விரக்தியுடன் சொல்வதாகட்டும், காலில் பட்ட அடியைக் கண்டு தன் மனைவி துடித்துப் போவதைப் பார்த்து கேலி செய்வதாகட்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, மனைவி பத்மினியை, ‘சாவித்ரீ... சாவித்ரீ...’ என்று கொஞ்சலும் கெஞ்சலுமாக, அன்பும் கேலியுமாக அழைக்கிற ஸ்டைலாகட்டும், இன்னொரு சிவாஜி பிறந்தால்தான் மீண்டும் இப்படி நடிப்பதெல்லாம் சாத்தியம்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள், கே.வி.மகாதேவனின் இசை, சிவாஜி, பத்மினி, நாகேஷ், ஸ்ரீகாந்த், வி.எஸ்.ராகவன், தங்கவேலு, ராமதாஸ் என எல்லோரின் நடிப்பு, பி.மாதவனின் அற்புதமான இயக்கம் என எல்லாமும் சேர்ந்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. 1970-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியானது ‘வியட்நாம் வீடு’. படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிவிட்டன. இன்னமும் ‘வியட்நாம் வீட்டில்’ குடிகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் மனங்களில் பலமான அஸ்திவாரத்துடன் கம்பீரமாகக் குடிகொண்டிருக்கிறது ‘வியட்நாம் வீடு’.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்து, அந்தக் கேரக்டர்கள் நம் மனதில் இன்றைக்கும் நிலைத்திருப்பதை பட்டியலிட்டுச் சொல்லமுடியும். சிவாஜி நடித்த படங்களும் அவரின் கேரக்டர்களும் இந்தப் பட்டியலில் அதிக இடம் பிடிக்கும். அதில், மிக முக்கியமான கேரக்டர் ‘பிரஸ்டீஜ் பத்மநாபன்’.
படத்தில் ரிடையர்மெண்ட், அதற்குப் பிறகான வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியிருப்பார். ஆனால் நிஜத்தில், பிரஸ்டீஜ் பத்மநாபனுக்கு ரிடையர்டே கிடையாது. அவரை எவராலும் மறக்கவே முடியாது. இதுவும் பத்மநாபனின் பிரஸ்டீஜ்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT