Published : 13 Apr 2020 01:51 PM
Last Updated : 13 Apr 2020 01:51 PM

மூன்றாம் உலகப் போருக்குத் தயாரா? - கரோனா குறித்து அறிவழகன் கவிதை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக இயக்குநர் அறிவழகன் கவிதை ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திக் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவரை கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேரைக் கடந்துவிட்டது. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே அடங்கியிருக்கிறார்கள்.

படப்பிடிப்புகளும் இல்லாத காரணத்தால் பிரபலங்களும் வீட்டில் தங்களுடைய குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' உள்ளிட்ட படங்களின் இயக்குநரான அறிவழகன், இந்த கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து கவிதை ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கவிதை இதோ:

'வேலன்டைன்‌ டே'வுக்கு
பக்கம்‌ பக்கமா
எமுதி இருக்கோம்‌..
கோரண்டின்‌ டேஸ்‌'களுக்கு
பொழுது போக
என்ன செய்யலாம்‌?
இதுக்கும்‌
ஏதோ எழுதலாம்‌...
இதோ
எழுதுகிறேன்‌...
இதுவும்‌ கூட
பொழுது போக்கா?
ம்‌...
கொஞ்சமாய்‌
ஒரு பொதுநலமும்‌ கூட...

அப்துல்‌ கலாமின்‌
வல்லரசு இந்தியா
ஆண்டில்‌...
கண்ணுக்கு தெரியாத
ஒரு வைரஸ்‌.

ஊடுருவிப்‌
பாரத்தால்தான்‌ தெரியும்‌...
ம்ம்‌..
உலகையும்‌
ஊடுருவிப்‌ பாரக்கும்‌ நேரமிது!

கிரிக்கெட்‌
ஸ்கோர்‌ போர்ட்‌ போல
நாடு வாரியாக...
மாநிலம்‌ வாரியாக...
மாவட்டம்‌ வாரியாக...
புதியதாக சேர்ந்தவர்‌..
பாதிக்கப்‌பட்டவர்‌.
பலனின்றி இறந்தவர்‌...
என
அறிக்கை கொடுப்பதே
அன்றாடச் செய்தியாக...

ஓடவும்‌ முடியாது...
ஒளியவும்‌ முடியாது...
ஓரே வீட்டுக்குள்‌
உன்‌ வீட்டுக்குள்‌
இரு...
என யாரோ
நம்ம வீட்டையே
பிக்‌ பாஸாக்கி
அதட்டி உட்கார
வைத்தது போல இருக்க...

வாட்ஸ்‌ அப்கள்‌
நியூஸ்‌ சேனலாய்‌
எது புதியது, எது பழையது
எனத் தெரியாது
ஒரு தடவைக்கு நாலு தடவை
வந்த வண்ணம்‌ இருக்க...

இந்த ஆண்டு
அமோகம்‌
எனச் சொன்ன
ஜோதிட ஜாம்பவான்கள்‌
நிகழ்காலம்‌ கேலிக்‌ கூத்தாகி
எதிர்காலம்‌ கேள்விக்‌ குறியாக,
மீம்ஸ்களுக்குத் தீனியாக...

அரசியலும்‌ வேணாம்‌
ஆரவாரமும்‌ வேணாம்‌
என
கொஞ்சம்‌ ஓய்வாய்‌
இறைவன்கள்‌
பூட்டிக்‌ கொள்ள
மனிதனே கடவுளாய்‌
மருத்துவக் கூடத்தில்‌
கண்‌ உறங்காது இருக்க...

ஜாதிக்கு ஜாதி
என இருந்த
தீண்டாமை
இன்று
மனிதனுக்கும்‌
மனிதனுக்குமான
ஒரு தீண்டாமை வேள்வி...
யார்‌ போட்ட ஸ்கெட்ச்‌ ?
என வியக்க வைக்க...

பெட்ரோல்‌ டீசல்கள்‌
இல்லாத காற்றில்‌
இமயமலை கூட தெரிகிறதாம்‌...
எந்தப் பயலையும்‌ காணோம்‌
எனத் தெரு நாய்கள்‌
குரைக்கவும்‌ பசியாற்றவும்‌
ஆளில்லாமல்‌ இருக்க...

வொர்க்‌ ஹோமாம்‌...
வீட்டில்‌ இருந்தே
வேலை...ம்‌
வீட்டு வேலையும்‌
சேர்ந்து கொள்ள...
ஹவுஸ்‌ ஓயிஃப்கள்‌
வொர்க்‌ ஹோம்‌
குழந்தைகளின்‌
ஹோம்‌ ஒரக்‌
இரண்டையும்‌ புதியதாய்‌
கவனிக்க வைக்க...

விதவிதமாய்‌ சாப்பிட
ஸ்விக்கி, ஜொமேட்டோ
இல்லாமல்‌
தவிக்கும்‌ ஒரு கூட்டம்‌!
ஒரு வேளை சோற்றுக்கே
வழியில்லாமல்‌
வந்த வழியே பேரணியாய்‌
நடக்கும்‌ ஒரு கூட்டம்‌...

முதல்‌ நாள்‌
முதல்‌ ஷோவிற்கு
லத்தி சார்ஜ்‌ வாங்கிய கால்கள்‌
வீட்டுச் சந்தினை
தாண்டி வந்தாலே
லத்தி சார்ஜ்க்கு தறி கெட்டு ஓட,

எந்த இடமாயினும்‌
நேர்‌ வரிசையில்‌ நில்‌...
என்று
ஒன்றாம்‌ வகுப்பு
பாட வரிகள்‌
இன்று உண்மையாக...

லாக்‌ டவுனில்‌
டாஸ்மாக்‌ குடிமகன்களுக்கு
சானிடைஸரும்‌
குவார்ட்டராய்‌ தெரிய,

துடைப்பதும்‌ பெருக்குவதும்‌
அதிசயமாய்‌ செய்கிறவர்களுக்கு
இன்ஸ்டாகிராம்‌
பதிவுகளாய்‌ மாற...

வழக்கமாய்‌
இந்த நாடும்‌
இந்த அரசும்‌
என்ன செய்கிறது ?
என
பேஸ்புக்‌ போராளிகள்‌
ஏவுகணை தொடுக்க...

நிஜமான
போர்‌க்களத்தில்‌
தீரர்களாய்
லத்தியுடனும்‌
துடைப்பத்துடனும்‌
சாலையில்‌ இருக்க...

கண்‌ போன போக்கில்‌
போன கால்களை
நிறுத்தி.
வாழ்வதற்கு
எது தேவை
எது போதும்‌
என்பதனை
ஒரு கோல மாவின்‌
வட்டத்திற்குள்‌
நிற்க வைத்துவிட்டது...

சமூக தூரம்ன்றது
சமூகத்தை விட்டு
உலகத்தை விட்டு
நிரந்தரமாய்‌ போகாமல்‌ இருக்க.
என
நம்‌ குழந்தைகளுக்கு
கற்றுக்‌ கொடுக்கும்‌
பாடமாய்‌ இருக்கட்டும்‌!

வரும்‌ முன்‌ காப்போம்‌ (அ)
வந்த பின்‌ பார்ப்போம்‌
எதுன்னு செலக்ட்‌ செய்யறது
நம்ம கையில்‌...!

21 நாட்கள்‌ ஊரடங்கு
விடுமுறை என்றும்‌...
வனவாசம்‌ என்றும்‌...
பலர்‌ சிலர்‌
நினைத்திருக்க...

22 ஆம்‌ நாள்‌
விட்டால்‌ போதுமடா...
ஆள விடங்கடா...
என
கதவினை உடைத்து
வேங்கையாய்‌ வராமல்‌
முதல்‌ கட்டப் போர்‌
முடிந்து,
பதுங்குக் குழியிலிருந்து
ஒவ்வொரு அடியினையும்‌
எடுத்து வைப்பது போல்‌
விழித்திரு!
விடிவு காலம்‌
வரும்‌ வரை...!

இல்லையெனில்‌...
கைதட்டி...
டார்ச்‌ அடித்தாலும்‌...
இன்று
டாலர்‌ தேசத்திற்கு
மருந்தாய்‌
கை கொடுத்தாலும்‌
நாளை உணவுக்கு
கை ஏந்தும்‌
நிலை மாறி...

இந்த நாடும்‌
நாட்டு மக்களும்‌
நாசமாய்‌ போகட்டும்‌
என
காலம்‌ கை விட்டு விட...

கண்ணுக்கு தெரியாத
வைரஸ்‌...
இனி
மனிதர்களாய்‌
கண்ணுக்குத் தெரிய...

இரண்டாம்‌ கட்டப்..
போருக்கு... ?!
மன்னிக்கவும்‌
மூன்றாம்‌
உலகப் போருக்குத்
தயாரா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x