Published : 13 Apr 2020 10:59 AM
Last Updated : 13 Apr 2020 10:59 AM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு நேற்று 1,528 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 22 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது:
''இந்த மோசமான சூழலில் மக்கள் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து தங்களால் முடிந்த உதவியைச் செய்வது மிக மிக முக்கியம். இளைஞர்கள் முன்னேற்றம், கல்வியில் வெற்றி பெறுவது ஆகிய இரண்டு காரணிகளும் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.
ஜேபிஎல் நிறுவனத்தில் உள்ள என்னுடைய சகாக்களின் உதவியோடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஹெட்போன்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த சூழலை நாம் அனைவரும் சேர்ந்தே கடக்க வேண்டும்''.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT