Published : 12 Apr 2020 06:45 PM
Last Updated : 12 Apr 2020 06:45 PM
ஏப்ரல் 8-ம் தேதி தன் வீட்டு வாசலில் நடந்தது என்ன என்பது குறித்தும், தான் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் நடிகர் ரியாஸ்கான் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே வந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள்.
இந்த ஊரடங்கை சிலர் மதிக்காமல் வெளியே சுற்றி வருகிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள். இதனிடையே ஏப்ரல் 8-ம் தேதி கரோனா சமயத்தில் ஏன் இப்படி ஒன்றுகூடி நிற்கிறீர்கள் என்று ரியாஸ்கான் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரியாஸ்கான் புகார் அளிக்கவே, இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளார் ரியாஸ்கான்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
"அனைவரும், வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள். எனக்கு நடந்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். என் வீடு தெரு முனையில் இருப்பதால், இரண்டு புறம் சாலைகள்தான். மாலை 5 மணியளவில் வீட்டின் பால்கனியில் நின்று காபி குடித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருக்கும் கார்னரில் 10 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.
உடனே கீழே இறங்கிப் போய் அவர்களிடம் "தம்பி. என்ன எல்லாரும் கும்பலாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எங்கு போகிறீர்கள்" என்று 10 அடி தூரத்திலிருந்து கேட்டேன். "நாங்கள் காற்று வாங்க வந்திருக்கோம் சார்" என்றார்கள். உடனே "தப்பான பதில் அல்லவா, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கோவிட்-19 பற்றி உங்களுக்குத் தெரியும். கும்பலாக நிற்கலாமா. இப்படி நின்றால் உங்களுக்கும் கெடுதல், எனக்கும் கெடுதல். நீங்கள் எந்த ஏரியாவிலிருந்து வருகிறீர்கள்" என்று கேட்டேன்.
ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிறோம். இங்கு வந்தோம் என்றார்கள். "உங்கள் வீட்டுக்குச் சென்று மொட்டை மாடியில் நின்று காற்று வாங்குங்கள். அதுதானே நியாயமான விஷயம்" என்று கேட்டேன்.
பதில் பேசிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்குள் நிற்கவில்லையே, ரோட்டில் தானே நிற்கிறோம் என்று சொன்னார்கள். எவ்வளவு சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. "நடிகர் ரியாஸ்கானாக இருந்தால் அது சினிமாவில் இருக்கட்டும். எங்களிடம் இதெல்லாம் சொல்ல வேண்டாம். இந்த கரோனா வைரஸ் தொற்று எங்களுக்கு வரவே வராது. எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டாம்" என்றார்கள்.
உடனே நான், "புத்திமதி சொல்லவில்லை. என்னோட குடும்பத்தை நான் காப்பாற்ற ஆசைப்படுகிறேன். பக்கத்து வீடு, எதிர் வீடு அவர்களுக்கு எல்லாம் எதுவும் வரக்கூடாது என்று சொல்கிறேன். உங்கள் நன்மைக்கும் தான் சொல்கிறேன். தயவுசெய்து கலைந்து செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட தனித்தனியாகச் செல்லுங்கள். கும்பலாகச் செல்லாதீர்கள்" என்றேன்.
அப்போது பேசிக்கொண்டே என்னருகில் நடந்து வந்து, அதில் ஒருவன் எகிறிக் குதித்து என் மண்டையில் அடிக்க வந்தான். அப்போது நான் விலகவே, என் தோளில் அடிபட்டுவிட்டது. ஏன் இதெல்லாம் யாருக்குமே ஏன் புரியவில்லை? லாக் டவுன் தொடங்கி 17 நாட்கள் ஆகின்றன. இதுவரைக்கும் அவர்களுக்கு அதன் சீரியஸ் என்னவென்று புரியவில்லை. ரொம்பக் கவலையாக இருக்கிறது.
காவல்துறையினர் வந்து அவர்களைக் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜோதி மேடத்துக்கு நன்றி. எவ்வளவு சங்கடமான விஷயம் பாருங்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களது பசங்களைக் கைது செய்ததற்கு எவ்வளவு கவலைப்படுவார்கள்.
ஏன் இப்படி இருக்கிறார்கள். தயவுசெய்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கரோனா வைரஸை ஒழிக்க முடியும். இல்லையென்றால் முடியவே முடியாது. எங்களுக்கு எல்லாம் கரோனா வைரஸ் வரவே வராது என்கிறார்கள். அது எந்த விதத்தில் என்று எனக்குப் புரியவில்லை. அனைவருமே பாதுகாப்பாக இருங்கள்".
இவ்வாறு ரியாஸ்கான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT