Published : 09 Apr 2020 12:24 PM
Last Updated : 09 Apr 2020 12:24 PM
செல்லப் பிராணிகளை வீட்டை விட்டு விரட்டும் நபர்களை பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கடுமையாகச் சாடியுள்ளார்.
உலகம் முழுவதும் ஜெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா வைரஸுக்குப் பலியாகி வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. இதனை உண்மையென நம்பி பலர் தங்கள் செல்ல நாய், மற்றும் பூனைகளை சாலைகளில் ஆதரவின்றி விடுவதாக தகவல்கள் வெளியாகின. இதை சமூக வலைதளங்களில் பலர் புகைப்படத்தோடு பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செல்லப் பிராணிகளை வீட்டை விட்டு அனுப்பும் நபர்களை பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது;
''செல்லப் பிராணிகளால் கரோனா வைரஸ் பரவுகிறது என்று நம்பி சிலர் தங்கள் நாய்களைக் கைவிடுவதாக சில தகவல்களைக் கேள்விப்படுகிறேன். உங்களிடம் சொல்ல என்னிடம் ஒரு செய்தி உள்ளது. நீங்கள் எல்லாம் முட்டாள்கள். நீங்கள் கைவிட வேண்டியது உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற செயல்களையும்தான். நாய்கள் கரோனாவைப் பரப்புவதில்லை. விலங்குகளிடம் அன்பாக இருப்போம்''.
இவ்வாறு சோனாக்ஷி சின்ஹா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT