Published : 08 Apr 2020 08:42 PM
Last Updated : 08 Apr 2020 08:42 PM
'நோ டைம் டு டை' படத்தில் மேற்கொண்டு மெருகேற்ற எதுவும் இல்லை என்று படத்தின் இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுநாகா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' உட்பட பல பெரிய பட்ஜெட் ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர், படத்தை இன்னும் கூட மெருகேற்ற இந்த நேரத்தை இயக்குநர் எடுத்துக் கொள்ளலாமே என்று சிலர் யோசனை தெரிவித்தனர்.
இதற்குப் பதில் கூறியுள்ள இயக்குநர் ஃபுகுநாகா, "சிலர் படத்தை இன்னும் மெருகேற்றலாம் என்றார்கள். கண்டிப்பா கூடுதல் நேரம் நல்லதே என்றாலும் படத்தின் முக்கிய வேலைகள் அனைத்தையும் கோவிட்-19 ஊரடங்குக்கு முன்னரே முடித்துவிட்டோம். எங்கள் கைகளை இறக்கிவிட்டோம்.
இன்னொரு சுருக்கமான பதில், பணம். பாண்ட் பிரம்மாண்டப் படமாக இருந்தாலும் அதன் மதிப்புக்குத் தகுந்த பணத்தையே செலவழிக்க வேண்டும். எந்தப் படத்தையும் போல இந்தப் படத்தையும் மெருகேற்றிக்கொண்டே போகலாம். ஆனால் படம் இப்போது இருக்கும் நிலையிலேயே சிறப்பாக இருக்கிறது. நீங்களும் படத்தைப் பார்க்கும்போது அப்படியே உணர்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறி முடித்தார்.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமான 'நோ டைம் டு டை', ஆரம்பித்த தருணத்திலிருந்தே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. முதலில் டேனி போயல் இயக்குநராக அறிவிக்கப்பட்டு பின் அவர் மாற்றப்பட்டார். நாயகன் டேனியல் க்ரெய்க், ஜமைகா படப்பிடிப்பில் காயப்பட்டார். அதற்காகச் சிறிய அறுவை சிகிச்சை அவருக்குச் செய்யப்பட்டது. இந்த மாதம் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா பிரச்சினையால் நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT