Published : 06 Apr 2020 05:31 PM
Last Updated : 06 Apr 2020 05:31 PM
இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்டின் நிவாரண நிதிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திரைத்துறையைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் உட்பட அனைத்து விதமான தயாரிப்பு வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தினக்கூலிப் பணியாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்தியத் தயாரிப்பாளர்கள் அமைப்பான கில்ட் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று நிவாரண நிதி ஒன்றை ஆரம்பித்தது.
இந்தியாவில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், அதான் தயாரிப்புகளில் பணிபுரியும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நான்கு வாரங்களுக்கான சம்பளத்தைத் தருவதாக முன்னமே அறிவித்திருந்தது. மேலும், சர்வதேச அளவில் பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்களுக்கு உதவ 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை அறிவித்தது.
இதில் பெரும்பான்மையான பங்கு, உலக அளவில் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்புகள் ரத்தாகியுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களுக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 15 மில்லியன் டாலர்கள் நெட்ஃபிளிக்ஸுக்கு பெரிய தயாரிப்பு தளம் இருக்கும் நாடுகளுக்கு என்று ஒதுக்கப்பட்டது. அதிலிருந்துதான் தற்போது ஒரு மில்லியன் டாலர்கள் இந்திய சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"மின் வல்லுநர்கள், தச்சர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், ஒப்பனை செய்பவர்கள் என தொலைக்காட்சி மற்றும் திரைத் தயாரிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களுக்கு உதவும் இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்டு அமைப்புடன் இணைவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் இருக்கும் குழுவினர் என்றுமே நெட்ஃபிளிக்ஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தனர். இப்போது எதிர்பாராத இந்த வேளையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு எங்களால் ஆனதைச் செய்ய விரும்புகிறோம்" என்று நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"அனைத்துத் தயாரிப்புகளும் ரத்தாகியுள்ள நிலையில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் இருந்த ஆயிரக்கணக்கான தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் ஒரே இரவில் காணாமல் போனது. இந்த நிவாரண நிதிக்குப் பங்களித்திருக்கும் துறையினருக்கு என் நன்றி. அவர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இந்த நிதிக்கு நெட்ஃப்ளிக்ஸின் தாராளமான நிதியை, தேவையிருப்பவர்களுக்கு உரிய நேரத்தில் உதவ நினைக்கும் அவர்கள் முடிவை மதிப்புமிக்கதாகக் கருதுகிறோம்" என்று கில்டின் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT