Published : 03 Apr 2020 09:37 PM
Last Updated : 03 Apr 2020 09:37 PM
இதிகாசத் தொடரான ராமாயணம் மறு ஒளிபரப்பு, இந்தி பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 2015-க்குப் பிறகு அதிக பார்வையாளர்களைப் பெற்ற நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
21 நாள் தேசிய ஊரடங்கை முன்னிட்டு, பிரபலமான பழைய தொடர்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இது கடந்த வார இறுதியில் ஆரம்பமானது. 'ராமாயண்', 'சாணக்யா', 'சக்திமான்' ஆகிய தொடர்கள் இந்த மறு ஒளிபரப்புப் பட்டியலில் உள்ளன.
இதில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு உருவான மறைந்த ராமானந்த் சாகர் தயாரித்து இயக்கிய தொடரான 'ராமாயணம் ' தொடர், ஒரு நாளை இரண்டு பகுதிகள் என சனி, ஞாயிறில் நான்கு பகுதிகள் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் எண்ணிக்கையை மதிப்பீடும் பார்க் அமைப்பின் அறிக்கை படி, 'ராமாயணம் ' தொடருக்கு மொத்தம் 170 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
அந்த வாரத்தில் ஒளிபரப்பான எந்த இந்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சியை விடவும் இது அதிகமான எண்ணிக்கையாகும். மேலும் நகரம், பெருநகரப் பகுதிகளில் இதுதான் முதலிடத்தில் உள்ளது.
சராசரியாக ஒவ்வொரு பகுதிக்கும் 28.7 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் இதன் அளவு 6.9 பில்லியன் நிமிடங்கள். ஒவ்வொரு பகுதியையும் 42.6 மில்லியன் மக்கள் தொடரைப் பார்த்ததாக அறிக்கை கூறுகிறது.
ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஜனவரி 1987-ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த 'ராமாயணம் ' தொடர் ஜூலை மாதம் வரை தொடர்ந்து மொத்தம் 78 பகுதிகள் என ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்துள்ளதாகக் கூறப்பட்டது. இது அன்றைய நாட்களில் ஒரு சாதனையாகும். 'ராமாயணம் ' தொடரின் வெற்றி குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT