Published : 03 Apr 2020 05:12 PM
Last Updated : 03 Apr 2020 05:12 PM
அடுத்ததாக என்னென்ன யோசனைகள் வரப்போகிறதோ என்று பிரதமர் மோடியின் பேச்சைச் சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தங்கர்பச்சான்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தற்போது பொதுமக்கள் தொடங்கி அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள்.
இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி ஒற்றுமையை வெளிப்படுத்துகிறீர்கள் என்று மக்களைப் பாராட்டிப் பேசினார் பிரதமர் மோடி.
மேலும், "கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் வாசலில் அல்லது பால்கனி பகுதியில் விளக்கு ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் லைட்டை ஒளிர விட்டு, சகமக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
இதற்கு ட்விட்டர் தளத்தில் பலரும் கிண்டலாகவும், சாடியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் தங்கர்பச்சான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"9 நிமிடங்கள் என்ன; இனி விளக்கே இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். மூன்று மாதங்களுக்கு முன்பே விமான நிலையங்களை மூடியிருந்தால் 130 கோடி மக்களையும் இப்படி வீட்டில் போட்டு மூடியிருக்க வேண்டாம். மணி அடிக்க வைத்தார்கள்! இப்போது விளக்கு ஏற்ற வேண்டுமாம்! அடுத்ததாக என்னென்ன யோசனைகள் வரப்போகிறதோ!"
இவ்வாறு இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
9 நிமிடங்கள் என்ன;இனி விளக்கே இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்!
மூன்று மாதங்களுக்கு முன்பே விமான நிலையங்களை மூடியிருந்தால் 130 கோடி மக்களையும் இப்படி வீட்டில் போட்டு மூடியிருக்க வேண்டாம்!
மணி அடிக்க வைத்தார்கள்!இப்போது விளக்கு ஏற்ற வேண்டுமாம்!அடுத்ததாக என்னென்ன யோசனைகள் வரப்போகிறதோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT