Published : 01 Apr 2020 03:32 PM
Last Updated : 01 Apr 2020 03:32 PM
இந்தியாவில் ஹாட்ஸ்டார் இணையதளம் ஏப்ரல் 3-ம் தேதியிலிருந்து டிஸ்னி + ஹாட்ஸ்டாராக மாறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்தில் டிஸ்னி + ஹாஸ்டார் செயலியின் மாதிரி வடிவம் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டது. இது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த செயலி திரும்பப் பெறப்பட்டது. மேலும் மார்ச் 29 அன்று ஐபிஎல் தொடரின் ஒளிபரப்புடன் துவங்கவிருந்த டிஸ்னி + சேவையும், கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக டிஸ்னி அறிவித்துள்ளது.
தற்போது தேசிய ஊரடங்கால் கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களுமே வீட்டுக்குள் இருப்பதால் இந்த நேரத்தை டிஸ்னி + சேவையைத் தொடங்க சரியாகப் பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 3 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி, டிஸ்னி+ ஹாஸ்டார் ப்ரீமியம் மற்றும் விளம்பரங்கள் இருக்கும் இலவச ஸ்ட்ரீமிங் என மூன்று விதமான திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்
இதில் டிஸ்னி+ ஹாஸ்டார் விஐபி திட்டத்துக்கு ஒரு வருடத்துக்கு ரூ. 399 கட்டணம். இதில் அனைத்து மார்வல் திரைப்படங்களும் இருக்கும். மேலும் மாநில மொழிப் படங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளும் காணக் கிடைக்கும்.
டிஸ்னி + ஹாஸ்டார் ப்ரீமியம் திட்டத்துக்கு ஒரு வருட சந்தா ரூ.1,499. இதற்குக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு விஐபி திட்டத்தில் இருக்கும் வசதிகளோடு சேர்த்து மற்ற ஆங்கில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஹெச்பிஓ, ஃபாக்ஸ்ஸ், ஷோடைம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் அமெரிக்க நிகழ்ச்சிகள், டிஸ்னி+ன் பிரத்தியேக தயாரிப்புகள் ஆகியவற்றைப் பார்க்க முடியும்.
ஏப்ரல் 2-ம் தேதி, சிவப்புக் கம்பள அறிமுக நிகழ்ச்சியை இணையம் மூலமாகவே டிஸ்னி+ நடத்தவிருக்கிறது. இதில் கடந்த ஆண்டு வெளியான 'லயன் கிங்' திரைப்படம் மாலை 6 மணிக்கு முதல் முறையாக ஸ்ட்ரீமிங்கில் திரையிடப்படும். டிஸ்னி+ தயாரிப்பான மண்டலோரியன் இரவு 8 மணிக்குத் திரையிடப்படும். இந்த இரண்டு படங்களுமே ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் காணக் கிடைக்கும்.
செயலியில் டிஸ்னி+க்கு தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் டிஸ்னி, பிக்ஸார், மார்வல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியோகிராஃபிக் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பார்க்கக்கூடிய வகையிலான நிகழ்ச்சிகளை மட்டுமே காட்ட வேண்டும் என்றால் பெற்றோர்கள் kids safe அம்சத்தை உபயோகிக்கலாம்.
தற்போது ஹாட்ஸ்டாருக்கு சந்தா செலுத்தியிருக்கும் அனைவருக்குமே அவர்கள் சந்தா திட்டத்துக்கு ஏற்றவாறு புதிய டிஸ்னி+ தயாரிப்புகளைப் பார்க்க முடியும்.
கவுதம் சுந்தர் - தி இந்து (ஆங்கிலம்) , தமிழில் கார்த்திக் கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT