Published : 31 Mar 2020 07:29 PM
Last Updated : 31 Mar 2020 07:29 PM
கரோனா பாதிப்புக்கு நிதியுதவி அளிக்காதது தொடர்பாக நடிகைகளைச் சாடியுள்ளார் தெலுங்கு நடிகர் பிரம்மாஜி.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐத் தாண்டிவிட்டது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். தெலுங்கில் முதல் நபராகத் தொழிலாளர்களுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி என்று அறிவித்தார் சிரஞ்சீவி. மேலும், கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்றையும் திரையுலகினர் சார்பில் தொடங்கியுள்ளார்.
இதற்கு பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். ஆனால், நாயகிகள் பட்டியலில் லாவண்யா திரிபாதி மட்டுமே நிதியுதவி வழங்கியுள்ளார். முன்னணி நாயகிகள் யாருமே நிதியுதவி அளிக்க முன்வரவில்லை. இதனைப் பேட்டியொன்றில் கடுமையாகச் சாடியுள்ளார் நடிகர் பிரம்மாஜி.
நடிகைகள் நிதியுதவி அளிக்காதது தொடர்பாக பிரம்மாஜி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"பெரும்பாலான முன்னணி நடிகைகள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இங்கு தெலுங்கில் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். நட்சத்திர அந்தஸ்தும் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் லாவண்யா திரிபாதி போன்ற நடிகைகளைத் தவிர வேறு யாரும் நிவாரண நிதிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் லட்சங்களைக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், குறைந்தது ஆயிரங்களையாவது இந்த நிவாரண நிதிக்கு நீங்கள் செலவு செய்யலாம்"
இவ்வாறு பிரம்மாஜி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT