Published : 29 Mar 2020 07:52 AM
Last Updated : 29 Mar 2020 07:52 AM

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்

பிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார். அவருக்கு வயது 76

சில காலமாகவே பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அனைத்தையும் தாண்டி சிகிச்சை பெற்று நலமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அவருடைய உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.

கடும் மூச்சுத் திணறலால் அவருடைய உடல்நிலை நேற்றிரவு (மார்ச் 28) மோசமடைந்தது. இதனால் அவரை இன்று (மார்ச் 29) அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அவருடைய உயிர் 3 மணியளவில் பிரிந்தது. இவரது வயது76

இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர். இவரை நினைத்துத் தான் பரவை முனியம்மா மிகவும் வருந்தி வந்தார். அரசாங்கம் சார்பில் ஏதேனும் உதவிகள் கிடைக்குமா எனப் பலமுறை முயற்சி செய்து வந்தார்.

விக்ரம் நடித்த 'தூள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுமார் 84 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' ஆகும்.

நடிகையாக அறிமுகமாகும் முன்பு நாட்டுப்புற பாடல்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம். சுமார் 30 ஆண்டுகளாக இதில் கோலோச்சி வருபவர். தமிழகம் தொடங்கி வெளிநாடுகளில் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் மிகவும் பிரபலம். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியிலும் அடியெடுத்து வைத்தார். முழுக்க மண் பானையிலேயே சமையல் செய்து, அதிலும் பிரபலமானார். சில வருடங்களுக்கு முன்பு இவர் வறுமையில் மிகவும் வாடினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அதாவது அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி, அதன் வட்டித் தொகை இவருக்குக் கிடைப்பது போன்று வழிவகைச் செய்து கொடுத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா காலமாகிவிட்டார் என்று செய்திகள் பரவின. அவை வெறும் வதந்தி தான். அவர் சிகிச்சைக்குப் பணமின்றி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. உடனடியாக விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்தார்கள். இதனைத் தொடர்ந்து உடல்நலம் தேறி பேட்டிகள் கொடுத்தார்.

அனைத்தையும் மீறி வந்தவரின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. இவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரை அருகே இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இவரது இறுதிச்சடங்கில் இவருடைய உறவினர்கள் பலரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x