Published : 27 Mar 2020 09:18 PM
Last Updated : 27 Mar 2020 09:18 PM

கூகுள் மூலம் கரோனாவின்  தீவிரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்: விஜய் ஆண்டனி

கூகுள் மூலம் கரோனாவின் தீவிரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார்

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 850-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயியுள்ளனர்.

இதனிடையே பொதுமக்களையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"நிலாவுக்கு ராக்கெட் விட்டோம், அங்கு வாழலாமா என்று யோசித்தோம். செவ்வாய் கிரகத்தைச் சீக்கிரம் பிடித்துவிடலாம் என நினைத்தோம். மனிதன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். மனிதனுக்கு அவ்வளவு சக்தி இருக்கு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு வைரஸ் உலகம் முழுக்க இப்படியொரு பிரச்சினை உருவாக்கி, நம்ம அனைவரையும் வீட்டில் உட்கார வைக்கும் என நினைத்தே பார்க்கவில்லை.

இந்தச் சமயத்தில் நாம் செய்ய வேண்டியது எல்லாமே, வெளியே எங்கேயும் போகாமல் அமைதியாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நம்மால் யாருக்கும் எந்தவொரு பிரச்சினையும் வராமல் மற்றவர்கள் பிரச்சினை நமக்கு வராமல் அமைதியாக வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். நீங்கள் கண்டிப்பாக கூகுளில் கரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது, அதன் தீவிரம் என்ன, அது வந்தால் நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு பிரச்சினைகள் என்பதை அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மாதிரியான வைரஸினால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய அழிவு இருக்கிறது என்பதை ஆங்கிலத்தில் 'கான்டேஜியன்' என்ற படமாக எடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் 'வைரஸ்' என்ற படமாக எடுத்திருக்கிறார்கள். நீங்கள் ஓய்வெடுக்கும் போது குடும்பத்துடன் அந்தப் படங்களைப் பாருங்கள்.

குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே போகும் போது, பணமில்லாமல் நிறையப் பேர் வாங்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையில்லாத பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் சாலைக்குச் செல்லும் போது ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுச் சொல்லுங்கள். தேவைப்படும் ஏழைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

கடைகளில் பொருட்கள் வாங்கும் போது 1 மீட்டாராவது இடைவெளி விட்டு நிற்க முயற்சி பண்ணுங்கள். தன் குடும்பத்தை எல்லாம் மறந்து நமக்காகத் தான் மருத்துவர்களும், காவல்துறையினரும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே சொல்லாதீர்கள்"

இவ்வாறு விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x