Published : 25 Mar 2020 01:28 PM
Last Updated : 25 Mar 2020 01:28 PM
இத்தாலி நாட்டின் நிலைமையை எடுத்துரைத்து, பொதுமக்களுக்கு நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு இந்தியாவில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை மீறியும் பலர் கரோனாவின் தீவிரம் புரியாமல் வெளியே சென்று வருகிறார்கள். இவர்களைக் காவல் துறையினர் வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள். இதனிடையே, இத்தாலி நாட்டில் உள்ள நிலைமையை எடுத்துரைத்து நடிகர் அர்ஜுன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த வீடியோவைப் பார்க்கும் அனைத்து தமிழக மக்களுக்கும் வணக்கம். இது புதிதான வீடியோ இல்லை. இதுவும் கரோனா வைரஸைப் பற்றியதுதான். உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து வீட்டிலிருந்து யாரும் வெளியே மட்டும் வந்துவிடாதீர்கள். உங்களைக் காப்பாற்ற மட்டுமல்ல, உங்களது குடும்பம் குழந்தைகள், வயதான பெற்றோர், இந்த நாடு என அனைத்தையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அரசாங்கம் உங்களுக்கு உதவுவது போல், நீங்களும் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். நீங்கள் வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், யாரும் எதுவும் பண்ண முடியாது. அந்த நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம்.
இந்த கரோனா வைரஸ் மற்றவர்களுடன் பேசினால், தொட்டுப் பேசுவதால் பரவும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளியே போகக் கூடாது. தினசரி தேவைகள் வாங்கப்போகும் போது கூட, பேஸ் மாஸ்க் இல்லாமல் போகவே போகாதீர்கள். அது கட்டாயமாக நினைத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது ரொம்பவே முக்கியம்
இன்னொரு விஷயம், உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. எனது நண்பர் ஒருவர் இத்தாலியில் இருக்கிறார். இன்று காலையில் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது என்ன தெரிந்தது என்றால், ஒரு நாளைக்கு இத்தாலியில் 5500 முதல் 6000 கரோனா வைரஸ் தொற்று கேஸ்கள் வருகின்றன. ஒரு நாளைக்கு 600 பேர் வரை குறைந்தபட்சம் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதைவிட ஒரு மோசமான விஷயம் கேள்விப்பட்டதே இல்லை. இதைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நாம் ஜாக்கிரையதாக இருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை கேஸ்கள் வரும்போது பெட்கள் இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
நமது இந்தியா 150 கோடி மக்கள்தொகை கொண்டது. அந்த மாதிரியான நிலை நம் மக்களுக்கு வந்தது என்றால், நிலைமையை யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்கு எல்லாம் நாம் இடம் கொடுக்காமல் இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. இதற்கு உங்களைப் பணமெல்லாம் சம்பாதிக்கச் சொல்லவில்லை. வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள் போதும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து 10, 100, 1000 என பரவிக்கொண்டே இருக்கும். நமது நாட்டைக் காப்பாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. நான் சினிமாவில் இருப்பதால் ஒரு விஷயம் சொல்லலாம் என நினைக்கிறேன். ரஜினி சாருடைய ரசிகர்கள், கமல் சாருடைய ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் எனக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் 95% பேர் இருப்பார்கள்.
ஏனென்றால் யாருடைய ஒருவரது ரசிகராவது இருப்பார்கள். நீங்கள் எல்லாம் சேர்த்து வெளியே செல்பவர்களைத் தடுத்து நிறுத்தலாம். கும்பலாகச் சேர்த்துக்கொண்டு தடுத்து நிறுத்துவது கிடையாது. தயவுசெய்து அந்த ரசிகர் மன்றத்தின் செயலாளர்கள் அனைவருக்கும் வெளியே வராதீர்கள் என குறுந்தகவல் அனுப்புங்கள். உங்கள் நடிகர் மீது அளப்பரிய அன்பு வைத்திருப்பீர்கள், இது உங்களுடைய அன்பைக் காட்டுவதற்கு ஒரு நேரமாக இருக்கும். தயவுசெய்து மனசு வைத்து நிறுத்துங்கள். பலரும் இது விடுமுறை என நினைக்கிறார்கள்”.
இவ்வாறு அர்ஜுன் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT