Published : 24 Mar 2020 08:59 PM
Last Updated : 24 Mar 2020 08:59 PM

இன்னும் கரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை

இன்னும் கரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"இந்த வீடியோ கரோனா வைரஸைப் பற்றியதுதான். அவர்களுடைய உடல் நலம், குடும்பத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என உழைக்கும் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் சல்யூட்.

அவர்கள் அனைவருக்கும் நாம் பண்ண வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் கேட்பதும் ஒன்றுதான். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்பதுதான். அவசரத் தேவை என்றால் மட்டும் வெளியே வாருங்கள். இன்னும் கரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 10- 20 பேருக்காவது இந்த வீடியோ போய்ச் சேரும் என்றுதான் இந்த வீடியோவைப் போட்டுள்ளேன்.

வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் பண்ண வேண்டும் என நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான். அப்படிச் செய்தாலே இந்த கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதை அனைத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புவது எப்போதும் ஒரே விஷயத்தைத்தான். உலகத்தின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x