Published : 24 Mar 2020 04:16 PM
Last Updated : 24 Mar 2020 04:16 PM
கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், நடிகர் சங்கத் தனி அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் அதில், "நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்சி சார்பில் இன்று பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன.
அதுபோலவே நமது சங்கம் சார்பிலும் சங்க வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு உதவி கோரினால் நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் உதவிகளைப் பாதிக்கப்பட்டுள்ள நமது உறுப்பினர்களுக்கு வழங்கலாம்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்றுச் சிறப்பு அலுவலர் இன்று (மார்ச் 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் வேலை வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவருகிறது. எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும். அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும். நமது சங்கத்தைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேயப் பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்" என்று கூறி நடிகர் சங்கத்தின் வங்கிக் கணக்குஎண்ணையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதல் நபராக ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT