Published : 23 Mar 2020 04:52 PM
Last Updated : 23 Mar 2020 04:52 PM
'சின்ன மாப்ள' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் விசு செய்த காரியத்தை நினைவு கூர்ந்து, டி.சிவா உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மதியம் முடிவுற்றது. விசுவின் மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
விசுவின் மறைவு குறித்து தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட விசு அவர்களின் இழப்பு, தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு. லட்சக்கணக்கான மக்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என பலருக்கும் ஆதர்ஷமாக விளங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியமைத்த ஜாம்பவான்களில் ஒருவர் அவர்.
கதை சொல்லலில் புதிய வடிவத்தைப் புகுத்தியவர். குடும்பக்கதைகளை சொல்வதில் அவருக்கு இணையானவர் எவரும் கிடையாது. அவர் ஒரு பிறவி நடிகர், முன்னணி பாத்திரம் ஆனாலும் சரி, கௌவர தோற்றம் என்றாலும் சரி, அவரை மிஞ்ச ஆள் இல்லை எண்ணும்படி, தனது பாத்திரத்தைச் செய்வதில் வல்லமை மிக்கவர்.
அவர் எனது முதல் தயாரிப்பான 'சின்ன மாப்ள' படத்தின் படப்பிடிப்பில், நடித்த முதல்நாள், எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. முதல் நாளே படப்பிடிப்பை அரை நாள் ஒத்திப்போடச் சொன்னார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியானோம். அப்படத்தில் அவரது பாத்திரம் தான் முன்னிலையில் இருக்கும் ஹீரோவை விட அவரது பாத்திரத்திற்கு வலு அதிகம், ஆனால் அவர் அப்படிச் செய்ய வேண்டாம் எனக்கூறி, படக்குழுவுடன் கலந்தாலோசித்து ஹீரோ பாத்திரத்திற்கு மேலும் வலு சேரும்படி கதையை மாற்றியமைத்தார்.
படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அது அமைந்தது. தன்னை விட அவருக்குத் திரைப்படத்தின் வெற்றியே எப்போதும் முக்கியம். அவரது அளவிலா ஆதரவிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது திரைப்பணிகள், கதைகள் காலகாலத்திற்கும் வரலாற்றில் அவரை நினைவில் இருத்தி வைக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”
இவ்வாறு டி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Reat in peace, Sir. We miss you. pic.twitter.com/2wmppKW8EA
— T Siva AmmaCreations (@TSivaAmma) March 22, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT