Published : 23 Mar 2020 11:46 AM
Last Updated : 23 Mar 2020 11:46 AM
இயக்குநர் முக்தா சீனிவாசன், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலைப் படமாக்குவது என முடிவு செய்து, வேலையில் இறங்கினார். ஆனால் மனதில், ‘இந்தக் கதை மக்களுக்குப் புரியுமா? வாடகைத்தாய் எனும் விஷயத்தை ஏற்றுக்கொள்வார்களா?’ என்கிற சந்தேகம் இருந்துகொண்டெ இருந்தது.
உடனே விசுவுக்கு போன் செய்தார். அப்போது லட்சுமி இயக்கிய ‘மழலைப் பட்டாளம்’, ‘பசி’ துரை இயக்கிய ‘சதுரங்கம்’ பட வேலைகள் எல்லாம் முடிந்து, படங்களும் ரிலீசாகியிருந்தன. நடிகராக அறிமுகமான ‘குடும்பம் ஒரு கதம்பம்’ அப்போது வரவே இல்லாத காலம்.
விசுவிடம் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ‘இந்தப் படத்துக்கு திரைக்கதையும் வசனமும் எழுதித்தரணும். கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. ஏதாவது மாற்றம் பண்றதா இருந்தாலும் பண்ணிரு’ என்றார் முக்தா சீனிவாசன். ‘எனக்கு ஒரு ரெண்டுநாள் டைம் கொடுங்க’ என்று சொல்லிச் சென்றார் விசு.
இரண்டாம் நாள். கதையில் சில விஷயங்களைச் சேர்த்துச் சொன்னார். மேலும் லட்சுமியின் மாமனார் கேரக்டரை டெவலப் செய்திருந்தார். அவர் சொன்ன மாறுதல்களைக் கேட்டு, அசந்துபோனார் முக்தா சீனிவாசன்.
மகனுக்கு குழந்தை இல்லை. அதற்காக புத்திரக் காமேஷ்டி யாகம் செய்கிறார் தந்தை. கட் செய்தால், மருத்துவமனை. ஹோமம் கட்... மருத்துவமனை சிகிச்சை கட். இப்படி மாறி மாறி காட்சிகளை விவரிக்க, அப்படியே விசுவை அணைத்துக்கொண்டார் முக்தா சீனிவாசன்.
****************************
’ஹலோ... பிலிம் சேம்பரா? நான் முக்தா சீனிவாசன் பேசறேன். என் மகன் ரவி அங்கே வந்துட்டானா?’
‘வணக்கம் சார். இன்னும் வரலியே சார்’
‘சரி வந்த கையோட எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க’. ‘சரி சார்’ என்று போன் வைத்த பத்தாவது நிமிடம், முக்தா ரவி வந்திறங்கினார். விஷயம் சொல்லப்பட்டது.
‘அப்பா, என்னப்பா?’
‘ரவி, ‘படத்துக்கு என்னய்யா டைட்டில்?’னு கவிஞர் (கண்ணதாசன்) கேட்டார். ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ ன்னு சொன்னேன். ’அறம் இல்லியே சீனு. அவச்சொல்லா இருக்கே’ன்னார். அதனால டைட்டிலை பதிவு பண்ணவேணாம். வந்துரு’ என்றார் முக்தா சீனிவாசன்.
**************************************************
‘’விசு... ஒருவிஷயம்... கவிஞருக்கு டைட்டில் பிடிக்கலை’’ என்று விவரம் மொத்தமும் சொல்லப்பட்டது. ‘நல்ல டைட்டிலா சொல்லேன் விசு’ என்றார் முக்தா சீனிவாசன்.
‘’இந்தக் கதைக்குப் பொருத்தமான டைட்டில் ஒண்ணு இருக்கு. ஆனா, அது நம்ம மெளலியோட ஒரு டிராமா டைட்டில். மெளலிக்கிட்ட கேட்டு, அதை வைக்கலாம், பிரமாதமா இருக்கும்’’ என்றார் விசு.
***********************************************
‘’மெளலி... நல்லாருக்கியா? எல்லாம் ஓகே. ஆனா டைட்டில்தான் சரியா அமையல. விசுகிட்ட கேட்டேன். டக்குன்னு ஒரு டைட்டில் சொன்னான். அந்தத் தலைப்புல நீ டிராமா போட்டிருக்கியாமே! நாங்க எடுக்கப் போற படத்துக்கான கதை இதுதான். உன் தலைப்பு பொருத்தமா இருக்கு’’ என்று முக்தா சீனிவாசன் சொல்ல, ‘விசு கரெக்டாத்தான் சொல்லிருக்கான். தாராளமா அந்த டைட்டிலை யூஸ் பண்ணிக்கோங்கண்ணா’ என்று மெளலி சொல்ல... விசு திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்துக்கு டைட்டில் விசு பரிந்துரைத்த பெயரே வைக்கப்பட்டது.
லட்சுமி, சிவகுமார், ஸ்ரீப்ரியா மூவரின் நடிப்பில் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப் படம்... ‘அவன் - அவள் - அது!’
முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி, இந்தச் சம்பவங்களைச் சொல்லி விசுவின் மறைவு குறித்து கண்கலங்கப் பேசினார். ‘அப்பா இறந்தப்போ, பெரியப்பா இறந்தப்போ எப்படியொரு துக்கமும் கவலையுமா இருந்தோமோ, விசு சார் மறைவு கேட்டதுலேருந்து அப்படித்தான் இருக்கு எங்க வீடு’ என்றார் முக்தா ரவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT