Published : 21 Mar 2020 06:34 PM
Last Updated : 21 Mar 2020 06:34 PM
கரோனா அச்சம் தொடர்பாக இளைஞர்கள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தனுஷ் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழக அரசு தொடங்கி பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தனுஷ் வீடியோ பதிவொன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:
“இந்த கரோனா வைரஸ் நம் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்குவிட்டது. 3 மாதங்களுக்கு முன்பு நமக்கு இப்படியொரு சூழல் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். போகட்டும். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது.
நமது பிரதமர் கேட்டுக்கொண்ட மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் நாம் யாரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். அப்படி நாம் இருப்பதால் அரசும், மருத்துவர்களுக்கும் கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்போம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள் என அனைவரும் அவர்களது உயிரை மட்டும் பணயம் வைத்துப் போராடவில்லை. அவர்கள் குடும்பத்தினர் உயிரையும் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். வீட்டில் இருப்போம். அவ்வளவுதான். கண்டிப்பாக முடிந்தவரை செய்ய வேண்டும்.
இந்த மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன், ரொம்ப தேவை மிக மிக அவசியம் என்றால் மட்டுமே, தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் வெளியே போவோம். அப்படியில்லை என்றால் வீட்டிலிருந்து வெளியே போகாமல் இருப்பதுதான் சிறந்தது. சில இளைஞர்கள் மத்தியில் நாங்கள் இளைஞர்கள், எங்களுக்கு கரோனாவால் என் உயிருக்கு பாதிப்பில்லை என்கிற ஒரு அஜாக்கிரதையும், கவனக்குறைவும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். தயவுசெய்து அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கரோனாவைப் பரப்பும் ஒருவராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீங்கள் ஒரு ஆபத்தாக மாறிவிடுகிறீர்கள். தயவுசெய்து பொறுப்புடன் செயல்பட்டுப் பாதுகாப்பாக இருங்கள்.
அரசாங்கமும், மருத்துவர்களும் என்னவெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள் சொல்லியிருக்கிறார்களோ அதைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருப்போம். மற்றவர்களையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வோம். நாளை மாலை 5 மணிக்கு நமக்காகப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்காகவும் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவோம். ஜெய்ஹிந்த்”.
இவ்வாறு தனுஷ் பேசியுள்ளார்.
#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT