Published : 21 Mar 2020 05:51 PM
Last Updated : 21 Mar 2020 05:51 PM
மாஸ்க், சானிடைசர்களின் விலை தொடர்பாக ரித்விகா கடுமையாகச் சாடி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும். பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தமிழக அரசு தொடங்கி பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, மாஸ்க் மற்றும் சானிடைசர்களின் விலை அனைத்துக் கடைகளிலும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இது பலரையும் கோபமாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரித்விகா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
”இந்த நேரத்தில் சமூக வலைதளத்தில் கரோனா வைரஸ் குறித்து நிறைய விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நானும் இந்த சமயத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். வழக்கத்தை விட நாம் அதிக முறை கை கழுவத் தொடங்கியிருக்கிறோம். வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள் என கை கழுவுகிறோம். அதற்கு ஒரு சிறு விழிப்புணர்வு வேண்டும்.
என்னவென்றால் 20 நொடிகள் கை கழுவ வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே தண்ணீர் குழாய் திறந்துவிட்டுக் கொண்டேதான் 20 நொடிகளும் கை கழுவுகிறோம். நான் உட்படப் பலருக்கும் அது மறந்துவிடுகிறது. இப்போது கோடை காலம். கண்டிப்பாக ஏப்ரல், மே, ஜூனில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும்.
ஆகையால் கை கழுவும் போது முதலில் கையை ஈரமாக்கிவிட்டு குழாயை மூடிவிடுங்கள். பின்பு சோப்பு போட்டு 20 நொடிகள் கையைச் சுத்தமாக்கிவிட்டு பின்பு குழாயைத் திறந்து கழுவுங்கள். இதன் மூலம் நிறையத் தண்ணீரைச் சேமிக்க முடியும். தண்ணீரை முன்பைவிட அதிகமாகவே இப்போது உபயோகித்து வருகிறோம். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இதைச் சொல்லுங்கள்.
சோப், சானிடைசர், மாஸ் உள்ளிட்டவை எப்போதும் விற்கும் விலையை விட அதிகமாக விற்கிறார்கள். நானே ஒரு மருந்துக் கடையில் கேட்டபோது, 50 மிலி கொண்ட சானிடைசர் விலை 80 ரூபாய் வரை இருக்கும். ஆனால், 220 ரூபாய் என்று சொல்கிறார்கள். இது ரொம்ப கேவலமான ஒரு விஷயம். பெரிய டீலர்கள் இந்த மாதிரி நேரத்தில் வழக்கமான நேரத்தை விடக் கொஞ்சம் குறைவான விலையில் கொடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது மனிதாபிமானமற்ற ஒரு செயல். சாலையில் பணிபுரிபவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நீங்கள் சானிடைசர்களை இலவசமாகக் கொடுக்க வேண்டும். ஒரு சின்ன சானிடைசர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து அவர்களால் வாங்கவே முடியாது. இந்த நேரத்தில் சுகாதாரம் ரொம்பவே முக்கியம். பணப் பற்றாக்குறையும் இருக்கிறது.
இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது தவறு. இதற்கு அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே மருந்தகத்தில் போய் கேட்டால், இந்த விலைக்குத்தான் விற்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த தருணத்தில் முடியாதவர்களுக்கு இலவசமாகக் கொடுங்கள். பணம் சம்பாதிக்கப் பார்க்காதீர்கள்”.
இவ்வாறு ரித்விகா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT