Published : 21 Mar 2020 12:38 PM
Last Updated : 21 Mar 2020 12:38 PM
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைத் தள்ளிவைக்கத் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட அணிகள் உருவாக்கும் பணியில் முன்னணித் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது டி.சிவா தலைமையில் ஒரு அணியும், முரளி தலைமையில் ஒரு அணியும் களத்தில் உள்ளன. இதனிடையே, டி.சிவா அணியில் செயலாளர் பதிவுக்குப் போட்டியிடும் ஜே.சதீஷ் குமார் தேர்தல் அதிகாரிக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ளேன். தற்போது எங்களது சங்கத்திற்கு வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தங்களைத் தேர்தல் அதிகாரியாகவும் நியமித்து அதன்படி தாங்கள் எங்களது சங்கத்திற்கு வந்து தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளீர்கள்.
தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுநலத்துடன் இந்தக் கடிதத்தினை தங்களிடம் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் உலகமெங்கும் கரோனா வைரஸ் தாக்கி பல நாடுகளில் பல நபர்களுக்குப் பெரிதும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. நேற்றைய தினம் பிரதமர் 60-வயது கடந்த நபர்கள் யாரும் 2 வார காலத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் தற்போது தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய வேண்டாம் என்று அவர்களுக்குள்ளேயே சுயக் கட்டுப்பாடுடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களது சந்தாத் தொகையினை இந்த மாதம் 31-ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்து ஏதேனும் குறை இருப்பின் அந்தக் குறைகளை இந்த மாதம் 24-ம் தேதிக்குள் கடிதமாக அளிக்க வேண்டும் என்றும் தாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளீர்கள். எங்களது சங்க உறுப்பினர்களில் பல பேர் 60 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களாக உள்ளார்கள்.
அவர்களால் தற்போது சங்கத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு கரோனா அச்சுறுத்தல் முழுவதும் நீங்கிய பிறகு தாங்கள் மேற்கூறியவற்றைப் பரிசீலனை செய்து வேறு ஒரு புதிய தேதி அறிவித்து எங்களது சங்கத்தின் தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஜே.எஸ்.கே குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT