Published : 20 Mar 2020 09:37 AM
Last Updated : 20 Mar 2020 09:37 AM
கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மோடி வேண்டுகோள் விடுத்த சுய ஊரடங்குக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
உலக அளவில் கடும் அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் பொது இடங்கள் மக்கள் அதிகமாகக் கூட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி நேற்றிரவு (மார்ச் 19) பொதுமக்களுக்கு உரையாற்றினார். அதில் கரோனா வைரஸ் தாக்கம் எந்த அளவுக்கு உலக அளவில் இருக்கிறது, மக்கள் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 22-ம் தேதி 'சுய ஊரடங்கு' முறையை அமல்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாகத் தனது பேச்சில், " வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நாள்தோறும் ஒருவர் குறைந்தபட்சம் 10 பேருக்காவது கரோனா வைரஸ் குறித்தும் சுய ஊரடங்கு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
இந்தப் பேச்சுக்குப் பிறகு #JanataCurfew என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகத் தொடங்கியது. பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமிதாப் பச்சன், சஞ்சய் தத், அக்ஷய் குமார், வருண் தவான், சோனாலி பிந்த்ரே, ரித்தேஷ் தேஷ்முக், மகேஷ் பட், ஷில்பா ஷெட்டி, அஜய் தேவ்கன், மதுர் பண்டர்கர் உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக தங்களுடைய ஆதரவை சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தனர்.
மேலும், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பலரும் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT