Published : 19 Mar 2020 08:48 PM
Last Updated : 19 Mar 2020 08:48 PM
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்று தன் தலைமையிலான அணியின் அறிமுகக் கூட்டத்தில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.
ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடும் போட்டிக்கு இடையே முதல் நபராக டி.சிவா தனது தலைமையிலான அணியை அறிவித்துள்ளார். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார் மற்றும் துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த அணியின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்றது. கரோனா முன்னெச்சரிக்கையால் சிலரை மட்டுமே அழைத்து இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைவராகப் போட்டியிடும் டி.சிவா பேசியதாவது:
''நான் கே.ஆர்.ஜி, அழகப்பன், ராம.நாராயணன் உள்ளிட்ட பலருடைய அணியில் செயற்குழு உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளேன். ஒரு முறை துணைத் தலைவராகவும், இரண்டு முறை செயலாளராகவும் இருந்துள்ளேன். இந்த முறையும் செயலாளராக இருக்கவே நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இந்த ஒரு இக்கட்டான சூழலில் பலம் வாய்ந்த அணி என் தலைமையில் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி.
தேனப்பன், ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே., தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கொண்ட ஒரு அற்புதமான அணி உருவாகியுள்ளது. இப்படியொரு அணி உருவாகியிருப்பதால், எனது நம்பிக்கை அதிகமாகியுள்ளது. முக்கியமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும் அனைவருமே நல்ல விஷயத்துக்காகவே போட்டியிடுகிறார்கள். யார் வந்தாலுமே நோக்கம் ஒன்றுதான். இந்த அணியில் எது சாதிக்கக் கூடியது என்பதைத்தான் தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும். அதைச் செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளோம்.
கரோனா அச்சத்தால் திரையரங்குகளில் படங்களின் திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும்போது, திரையிடப்பட்டுக் கொண்டிருந்த படங்கள் அப்படியே திரையிடப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். இதற்காக விநியோகஸ்தர்கள் சங்கத்திடம் பேசியிருக்கிறோம்,
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஏனென்றால், இது ரொம்ப முக்கியமான விஷயம். அரசாங்கத்துக்கு எதிராக இருக்கக் கூடிய யாருமே இதில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அரசுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே, அரசு சார்பு தொழில்கள் நிலைக்க முடியும். இங்கு பதவிக்கு வருபவர்கள் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கக் கூடாது. அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும். இப்போதுள்ள அரசு அனைத்து விதத்திலும் சினிமாவுக்கு ஒத்துழைப்புடன் உள்ளது. சங்கம் பழைய நிலைக்குத் திரும்ப அனைத்தையும் செய்வோம்”.
இவ்வாறு டி.சிவா பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT