Published : 19 Mar 2020 12:40 PM
Last Updated : 19 Mar 2020 12:40 PM
குவாடன் பேல்ஸுக்கு நடிக்க ஆசையிருப்பதைத் தொடர்ந்து, அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் 'கின்னஸ்' பக்ரூ.
சில வாரங்களுக்கு முன்பு, குள்ளமாக இருப்பதாகத் தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதால் தன்னைக் கொன்றுவிடுங்கள் என்று ஆஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவாடன் பேல்ஸ் கண்ணீர் விட்டு அழும் காட்சியை அவரின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ பகிரப்பட்ட பின் சிறுவன் குவாடன் பேல்ஸுக்கு ஆதரவு குவியத் தொடங்கியது. ஏராளமானோர் அவருக்கு உதவியும் அளித்து வருகின்றனர். பல்வேறு ஊடகங்கள், பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பேல்ஸ் கவுரவிக்கப்பட்டார்.
பேல்ஸுக்கு இந்தியாவிலிருந்தும் எண்ணற்ற பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும், ஆறுதலையும் தெரிவித்திருந்தனர். அதில் குறிப்பாக நடிகர் 'கின்னஸ்' பக்ரூ, தானும் சிறு வயதில் இதுபோன்ற கிண்டல்களை எதிர்கொண்டதாகவும், அன்று தான் அழுததுதான் பின்னாளில் தனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவு ஊக்கத்தைத் தந்தது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பக்ரூவின் இந்த வார்த்தைகளால் ஊக்கம் பெற்றுள்ள குவாடன், பக்ரூவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி குவாடனின் தாய் யாரகா ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
"குவாடனுக்கும் நடிகனாக வேண்டும் என்று ஆசை. அதனால் (பக்ரூவின்) அந்த வார்த்தைகள் அவனுக்கு ஊக்கத்தைத் தந்துள்ளன. ஒரு கலைஞர், குவாடனைப் போலவே தானும் பிரச்சினைகளைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னது குவாடனுக்கு கண்டிப்பாக பெரிய ஆறுதலைத் தந்துள்ளது" என்று யாரகா கூறியுள்ளார்.
மேலும் இந்தியா வரும்போது பக்ரூவைச் சந்திக்க விரும்புவதாகவும் யாரகா தெரிவித்துள்ளார். இதை அறிந்து கொண்ட பக்ரூ, தற்போது தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பகக்த்தில், குவாடனை நடிக்க வைக்கத் தயார் என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பக்ரூ கூறியிருப்பதாவது:
”உனக்காக இரண்டு நற்செய்திகள் குவாடன். ஒன்று இந்தியாவில் இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு எதிராக வி ஆர் வித் யூ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளோம். தற்போதைய கரோனா பதற்றம் தணிந்தவுடன் இது சர்வதேச அளவில் துன்புறுத்தலுக்கு எதிரான பிரச்சாரமாக இருக்கும்.
அடுத்த நற்செய்தி, நீ நடிக்க விருப்பம் என்று சொல்லியிருந்தாய். ஜானகி என்கிற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க உனக்கு ஒரு அழகிய வாய்ப்பு தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் கருவே துன்புறுத்தல், உடலமைப்பைப் பார்த்து நையாண்டி செய்தல் ஆகியவற்றுக்கு எதிரானதுதான். கரோனா பிரச்சினை தீர்ந்தவுடன் இந்தப் படத்தின் இயக்குநர் உன்னை நடிக்க அழைக்கவுள்ளார்”.
இவ்வாறு பக்ரூ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT