Published : 18 Mar 2020 07:36 PM
Last Updated : 18 Mar 2020 07:36 PM
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணியின் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
யாரெல்லாம் போட்டியிடவுள்ளார்கள் என்ற பரபரப்பு உண்டானது. ஏனென்றால், இந்த முறை விஷால் அணியிலிருந்து யாருமே தேர்தலில் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் ஆளாக டி.சிவா தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி' என்று டி.சிவாவின் அணிக்குப் பெயரிட்டுள்ளனர். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன், ஹெச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ் குமார், நந்தகோபால், மனோபாலா, பாபு கணேஷ், சுப்பு பஞ்சு, முருகராஜ், வினோத் குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாகத் திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம் என்று டி.சிவா தலைமையிலான அணி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT