Published : 16 Mar 2020 04:44 PM
Last Updated : 16 Mar 2020 04:44 PM
'மாஸ்டர்' படம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இசை வெளியீட்டு விழா மூலம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
''இது 3-வது படம். ஆனால், என் முதல் இசை வெளியீட்டு விழா. 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் நானும் ரத்னாவும் உட்கார்ந்து இதே மாதிரி இன்னும் சில மாதங்களில் நாமும் பேச வேண்டும் அல்லவா என்று பேசிக் கொண்டிருந்தோம். அது இவ்வளவு சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கவில்லை. முதலில் விஜய் அண்ணாவுக்கு நன்றி, நம்பி இவ்வளவு பெரிய படத்தைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி சேது அண்ணா. ஒரு வரிக் கதையை மட்டும் கேட்டுவிட்டு, உன்னை நம்பி வர்றேன்டா... பண்றேன் என்றார். பாடல்களுக்கு மிகவும் நன்றி அனிருத்.”
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜிடம் சில கேள்விகளை எழுப்பினர்.
அந்தக் கேள்விகளும், லோகேஷ் கனகராஜின் பதில்களும்:
விஜய்யுடன் படம் அமைந்தது எப்படி?
சதீஷ் என்ற நண்பர் மூலமாக ஜெகதீஷைச் சந்தித்தேன். அவர் மூலமாகத்தான் விஜய் சாரை சந்தித்தேன். 'கைதி' படப்பிடிப்பு சமயத்தில் இந்த வாய்ப்பு வந்தது. விஜய் சாரிடம் போய் ஒரு கதை சொன்னேன். அவருக்குப் பிடித்தது. அந்தப் படம் முடிவதற்குள் இந்தப் படம் நடந்தது.
விஜய் - விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிப்பது எப்போது முடிவானது?
கதை முடிவாகி, டிஸ்கஷனில் இருக்கும்போது இந்தக் கேரக்டரை யாரை வைத்துப் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். சேது அண்ணா பண்ணினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். விஜய் சாரிடம் சொன்னோம். அவரும் கேளுங்கள் என்றார். உடனே, அவரை சந்தித்துச் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார்.
தளபதி விஜய்யைப் பற்றி எங்களுக்குத் தெரியும். 'மாஸ்டர்' விஜய் பற்றி?
விஜய் சாரை வேறு மாதிரி காட்டுகிற படமாக இருக்கும். இதன் கதையம்சமும் சொல்லும் விதமும் புதிதாக இருக்கும். இதுவரைக்கும் யாரும் விஜய் சாரை அப்படிப் பார்த்திருக்க மாட்டோம்.
வாத்தி என்று வைத்திருந்தீர்கள். உங்கள் கூட இருப்பவர்களுக்குக் கூட 'மாஸ்டர்' என்று தெரியாதாமே. ஏன்?
ஆம். இயக்குநர்கள் அணிக்கான வாட்ஸ் அப் குரூப்பில் கூட வாத்திதான் தலைப்பு. யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்லியிருந்தேன். ஃபர்ஸ்ட் லுக் வந்தவுடன்தான் 'மாஸ்டர்' என்றே அனைவருக்கும் தெரியும்.
முதல் 2 படத்தில் பாடல்கள் இல்லை. இதில் நிறைய பாடல்கள். அந்த அனுபவம்?
இந்தப் படத்தில் அனைத்து அனுபவமுமே புதிதுதான். ஏனென்றால், முந்தைய படங்களில் ஒரே காஸ்ட்டியூம் தான். ஆகையால் முதல் நாள் படப்பிடிப்புக்குப் பிறகு காஸ்ட்டியூம் டிசைனருடன் பேச்சுவார்த்தையே இருக்காது. இந்தப் படத்தில் 200 பேருக்கும் உடைகள். இசையை வாங்கிக் கொண்டு ஷூட்டிங் போனதே இல்லை. அனைத்துமே புதிதுதான். இந்தப் படத்தின் கதையம்சம் அப்படி, என்பதால்தான் பாடல்கள் அதிகம். அனைத்துமே கதைக்குப் பொருத்தமாக இருக்கும்.
'மாஸ்டர்' விஜய் பற்றி...
விஜய் சார் எதெல்லாம் வழக்கமாகப் பண்ணுவாரோ, அதெல்லாம் இந்தப் படத்தில் பண்ணவில்லை. ஒரு வழக்கமில்லாத விஜய் படமாக இருக்கப் போகிறது. ட்ரெய்லர் வெளியானவுடன் அது தெரியும்.
3 போஸ்டர்கள் குறித்து...
அனைத்து போஸ்டர்களுமே கதையை மீறிப் போய்விட வேண்டாம் என்று நினைத்தேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT