Published : 16 Mar 2020 11:16 AM
Last Updated : 16 Mar 2020 11:16 AM
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மதம் அவசியமில்லாதது என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசினார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் ரசிகர்கள், பத்திரிகையாளர் என யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. படக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டார்கள்.
இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு விஜய் மற்றும் படக்குழுவினரைப் புகழ்ந்து பேசினார். இறுதியாக மதரீதியாக உலவும் சர்ச்சைகள் தொடர்பாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது:
“இன்னொரு வைரஸ் இருக்கிறது., அதற்குப் பெயர் என்னவென்று தெரியவில்லை. கடவுளுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இங்கு பலகோடி வருடங்களாக இருக்கிறது. ஆனால், கடவுள் இன்னொரு கடவுளைக் காப்பாற்றும் மகா மனிதரைப் படைக்கவே இல்லை. கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எந்தவொரு கூட்டத்துடனும் தயவு செய்து பழகாதீர்கள். அது ரொம்பவே முக்கியம்.
கடவுளைச் சாதாரண மனிதனால் காப்பாற்றவே முடியாது. அது பொய், அதெல்லாம் நம்பவே நம்பாதீர்கள். யாராவது இது தொடர்பாக உங்களிடம் பேசினால், திருப்பி என்னுடைய மதத்தில் என்ன சொல்கிறது என்றால் என்ற பதிலைச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக மனிதத்தையும் மனித நேயத்தையும் சொல்லிக் கொடுங்கள். மனிதரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
கடவுள் மேலே இருக்கிறார். மனிதன் தான் பூமியில் இருக்கிறான். ஆகையால் மனிதனை மனிதனால் தான் காப்பாற்ற முடியும். இது மனிதர்கள் வாழுவதற்கான இடம். மனிதன் சகோதரத்துவத்துடன் சந்தோஷமாக அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழவேண்டும். மதத்தைச் சொல்லி கடவுளையே பிரிக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மதம் அவசியமில்லாதது.”
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT