Published : 09 Mar 2020 04:46 PM
Last Updated : 09 Mar 2020 04:46 PM

'ஜிப்ஸி' படக்குழுவினரின் முடிவு: தணிக்கை குழுவினர் ஆச்சரியம்

'ஜிப்ஸி' படக்குழுவினரின் முடிவால், தணிக்கை குழுவினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் தணிக்கை பிரச்சினையில் சிக்கி, நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

அதிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கட், பல காட்சிகள் ப்ளாக் அண்ட் ஒயிட் மாற்றம் என படக்குழு மாற்றியுள்ளது. மார்ச் 6-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சமூக வலைதளத்தில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த தணிக்கைக் குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வருகிறது.

அந்தக் காட்சிகள் யாவுமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், தொடர்ச்சியாக நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டில் தணிக்கை செய்யப்படாத படத்தை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சில காட்சிகள் படத்தில் இருக்கக் கூடாது என்று நீக்கப்பட்ட நிலையில், அதையே படக்குழுவினர் விளம்பரத்துக்குப் பயன்படுத்தி வருவது தணிக்கை அதிகாரிகள் தரப்பை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனென்றால், திரையரங்க வெளியீட்டுக்குத்தான் தணிக்கை தேவை. யூடியூப் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் வெளியீட்டுக்கு தணிக்கை தேவையில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது 'ஜிப்ஸி' படக்குழு. இந்தப் படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x