Published : 07 Mar 2020 07:51 AM
Last Updated : 07 Mar 2020 07:51 AM
‘‘ஒரு நடிகராக ரசிகர்களுக்குத்தான் நலத்திட்ட உதவிகளை செய்ய முடிகிறது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் நல்லது செய்ய வேண்டுமானால், அரசியலில் இறங்கித்தான் ஆக வேண்டும்..’’ என்ற முடிவோடு 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.
ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, ரஜினி மக்கள் மன்றம் தொடக்கம், அரசியல் கட்சிகளை விமர்சிப்பது, அவ்வப் போது மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பது என படிப்படியாக முழுநேர அரசியல் பாதை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது இந்தப் பாதையை தொடரலாமா, வேண்டாமா? என்கிற யோசனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் ரஜினி.
சென்னை ராகவேந்திரா திருமண மண்படத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, ‘ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்’ என்று பேசியது ரஜினியின் 40 ஆண்டுகால ரசிகனையும் கதிகலங்கச் செய்திருக்கிறது.
அவருக்கு அப்படி என்னதான் ஏமாற்றம்? அவரது எதிர்பார்ப்புதான் என்ன?
இதுகுறித்து களமிறங்கி விசாரித்ததில், ரஜினியின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.
கட்சி வேறு.. ஆட்சி வேறு
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில், அதிமுக, திமுகவுக்கு அடுத்த பெரும் கட்சியாக ஒருவேளை ரஜினியின் மக்கள் மன்றம் உருவெடுக்கும் பட்சத்தில், தனது அரசியல் கட்சியின் பயணத்தை அவர் எப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறார் என்பதை நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தும் நோக்கில்தான் சமீபத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையே ரஜினி ஒருங்கிணைத்திருக்கிறார். அப்படி நடந்த கூட்டத்தில், தனது கருத்துகள், எதிர்பார்ப்புகளை அவர் திட்டவட்டமாக கூறியதை மாவட்டச் செயலாளர்களே பலரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
‘மன்ற நிர்வாகிகளில் யாரேனும்தலைமைப் பொறுப்புக்கு வர ஆசை இருக்கிறதா?’ என்ற முக்கிய கேள்வியோடுதான் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறார் ரஜினி. ‘நீங்கள்தான் தலைமை. ஏன் இப்படி கேட்கிறீர்கள்?’ என்று மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிக்கு மாற்றாக ஒரு தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அதுபற்றியே தொடர்ந்து பேசிய ரஜினி, ‘நானோ, என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ பதவிக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. நாம் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்தால்கூட, கட்சி வேறு; ஆட்சி வேறாகத்தான் இருக்க வேண்டும். ‘சிஸ்டத்தை’ மாற்ற விரும்புவதுதான் நம் அடிப்படை கொள்கை. எனவே, நானே தலைவனாக இருப்பது சரியாகப்படவில்லை. ஏற்கெனவே ஆட்சி நடத்திய திமுக, தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக ஆகியவற்றையே அது பிரதிபலிக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பால் தாக்கரே பாணியில்..
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் உறுதுணையோடு பாஜக கடந்த 1995-ல் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அப்போதும் சிவசேனாவின் நிறுவன தலைவரான பால் தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. அந்த நிலைப்பாட்டைத்தான் தற்போது ரஜினியும் எடுத்திருக்கிறார். இந்த அரசியல் முடிவில் ஈர்க்கப்படும் தமிழக முன்னணி கட்சிகள், கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், மாற்றுக் கட்சியினர் என யார் வந்தாலும் இணைத்துக் கொள்ளலாம் என்கிற முடிவையும் அவர் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை
ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை என்ற அரிச்சுவடியை பலமுறை உச்சரித்த ரஜினி தற்போது அதை பிரகடனப்படுத்த உள்ளதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.
45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்குத்தான் கட்சியில் முக்கிய பொறுப்பு. மேலும், படித்தவர்கள், அறிவார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பதவிகள் தரவேண்டும். இதில் யார் ஒருவர் தவறு செய்தாலும் அவரை தட்டிக் கேட்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே இருக்கும். இதற்கு மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்றும் ரஜினி கூறியுள்ளார். இந்த கருத்துக்கு மாவட்ட செயலாளர்களில் பலர் உடன்படவில்லை. ஆனாலும், இதுபற்றி ரஜினியிடம் நேரடியாக எந்த கருத்தையும் கூறாமல், வெளியில் சென்று தங்களது ஆதங்கத்தை வெடித்துள்ளனர்.
வயது, அனுபவம்
வேட்பாளர்களிடம் கணிசமாக ஒரு தொகைவாங்கிக்கொண்டு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ரஜினி விரும்பவில்லை. அவ் வாறு பணம் கொடுத்துவிட்டு பொறுப்புக்கு வருபவர்கள், மீண்டும் அந்த பணத்தை சம் பாதிக்க ஊழல் உள்ளிட்ட விஷயங்களிலேயே ஈடுபடுவார்கள். அதையும் மீறி ஒரு கட்டத்தில் தன்னிடமே வந்து, ‘‘தலைவரே! இவ்வளவு பணம் செலவழித்துள்ளேன். எனக்கு அந்த கான்ட்ராக்ட்டை கொடுங்க’’ என்று வந்து நிற்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட உள்ளதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் ரஜினி.
தனது 70 ஆண்டுகால திறன், அனுபவத்தைக் கொண்டு, ஒரு அரசியல் வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்து ஆட்சியாளர்களை வழிநடத்த வேண்டும் என்பதுதான் ரஜினியின் திட்டமாக இருக்கிறது.
தனது உடனடி செயல்பாடுகள் மட்டுமின்றி, தொலைநோக்கு சிந்தனையையும் மாவட்டச் செயலாளர்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலேயே அவர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்து பேசியிருக்கிறார்.
‘‘நான் முதல்வர் அல்ல. என் கட்டுப்பாட்டின் கீழ் அரசியலுக்கு வரும் யாரும் பணம் சம்பாதிக்க நினைக்கக் கூடாது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு பெரிதாக பதவிகள் இல்லை என்றாலும் வருத்தப்படக் கூடாது. இந்த கட்டளைகளை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால் கட்சி தொடங்கிவிடலாம்.
யாருக்கும் விருப்பம் இல்லையா? எந்த பிரச்சினையும் இல்லை. ‘எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. சினிமா போதும்’ என்று ஒரு வாரத்தில் அறிவித்துவிடுகிறேன்.
வழக்கம்போல, என் ரசிகர்களுக்கான நடிகனாக, சூப்பர் ஸ்டாராக ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு, அடுத்து இமயமலை என்று இருந்துவிடுகிறேன்..’’
இவ்வாறு ரஜினி கூறியது நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது சிந்தனை, பார்வை, எண்ணம், கருத்துகள் பற்றி ஏற்கெனவே பொதுவாக தெரியும் என்றாலும், திட்டவட்டமாக அவர் பேசியிருப்பது, மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.
நிர்வாகிகள் மத்தியில் தனது பேச்சு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியிலும் ரஜினி இறங்கியுள்ளார். அவரது அடுத்தகட்ட முடிவு என்ன என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT