Published : 01 Mar 2020 02:18 PM
Last Updated : 01 Mar 2020 02:18 PM

அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயா ஒப்பந்தம்

'வலிமை' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க கார்த்திகேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதுவரை 30% படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில முக்கிய காட்சிகளை அவ்வப்போது எடுத்து வருகிறது படக்குழு. இதனிடையே அடுத்ததாகப் பெரிய ஷெட்டியூல் ஒன்றுக்குத் திட்டமிட்டு வருகிறது.

இதில் தான் அஜித் - வில்லன்கள் மோதும் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கவுள்ளது. இதனால், அஜித்துடன் நடிக்கவுள்ள வில்லன்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகப் பலரையும் வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்துள்ளார்கள்.

மொத்தம் இந்தப் படத்தில் அஜித்துடன் 3 வில்லன்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் ஒருவராக நடிக்கத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தில் அஜித்துக்கு நாயகியாக ஹியூமா குரோஷி நடித்து வருவது உறுதியாகியுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். தீபாவளி வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x