Published : 29 Feb 2020 11:57 AM
Last Updated : 29 Feb 2020 11:57 AM
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் வெளியீட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமல் நடிப்பில் 'கன்னி ராசி' மற்றும் 'சண்டக்காரி' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மேலும், 2018-ம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவான 'மன்னர் வகையறா' படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியிட்டார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் படத்தின் போது ஏற்பட்ட கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறார். தற்போது இந்தப் பணப்பிரச்சினையால், அவர் நடித்து வெளியாகவுள்ள படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'மன்னர் வகையறா' படத்தின் போது விமலுக்கு கடன் அளித்த அரசு பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அரசு பிலிம்ஸ் நிறுவனம், "நடிகர் விமல் தயாரித்த ’மன்னர் வகையறா’ படத்திற்கு அவர் கேட்டுக் கொண்டதால் ரூ. 5,35,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) கடனாகக் கொடுத்திருந்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ரூ.1,35,00,000/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி தொகையைத் திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.
அதனை நம்பி நானும் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறேன். ஆனால் " மன்னர் வகையறா " படத்திற்குப் பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு எந்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி என்னுடைய NOC இல்லாமல் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அரசு பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT