Published : 25 Feb 2020 08:01 PM
Last Updated : 25 Feb 2020 08:01 PM
'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'அக்கா குருவி' பட இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. உலக அளவில் மிகவும் பிரபலமான இந்தப் படம் பல்வேறு உயரிய விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இயக்கி வருகிறார் இயக்குநர் சாமி.
'அக்கா குருவி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மஜித் மஜிதியை அழைக்க முடிவு செய்துள்ளார் சாமி.
இதில் அண்ணன் - தங்கையாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் சாமி கூறுகையில், "எனது முந்தைய 3 படங்களுமே எனது அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல்தான் இயக்கப் போகிறேன்.
ஒருமுறை என் அக்கா என் வீட்டுக்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை என் குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்துத் தரப்பு குழந்தைகளிடம் எப்படிக் கலந்துள்ளது என்பதைக் குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என் அக்காவின் கேள்விக்குப் பதிலாக, இப்படத்தைத் தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன்.
இப்படம் 80-களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளைச் சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காகப் பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று ஊரைத் தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வைச் சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT